விவசாயிகள் வயிற்றில் அடித்த திமுக… பிராயச்சித்தம் தேடுங்க… விளாசிய நயினார்…!
திமுக அரசு விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
நெற்பயிர்களைத் தண்ணீரிலும், விவசாயிகளைக் கண்ணீரிலும் திமுக அரசு மிதக்கவிட்டு இருப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஏரியில் இருந்து முறையான அறிவிப்பின்றி ஆளும் அரசு உபரி நீரைத் திறந்துவிட்டதால், 50 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிலும் வயலா குளமா என்று தெரியாதளவிற்குப் பொங்கல் அறுவடைக்குக் காத்திருந்த நெற்பயிர்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ள காணொளியைக் காண்கையில் நமது நெஞ்சம் கனத்துப்போகிறது என தெரிவித்தார். சோழவரம் மற்றும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கேவுள்ள கால்வாய்களை முறையாகத் தூர்வாரி சீரமைத்து இருந்தாலே, இத்தகைய பெரும் அசம்பாவிதத்தினை அரசு தடுத்திருக்கலாம் என்று தெரிவித்தார்.
ஆனால், மழைநீர் வடிகால் பணிகளுக்குண்டான நிதியைக் கொள்ளையடித்துவிட்டுத் தமிழக விவாயிகளின் வயிற்றிலடித்த திமுக அரசுக்குத் தொலைநோக்குப் பார்வையும் இல்லை, மக்கள் நலன் குறித்த சிந்தனையும் இல்லை என்பதைத் தான் இதுபோன்ற சம்பவங்கள் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக தெரிவித்தார். இவ்வாறு தமிழகத்தின் நீர் மேலாண்மையைப் பாழுங்குழியில் தள்ளிவிட்டு அதன்மேல் தங்கள் விளம்பரங்களைக் கட்டமைக்கும் திமுக அரசுக்கு ஆட்சியில் தொடர என்ன தகுதி இருக்கிறது என நயினார் நாகேந்திரன் கடுமையாக சாடியுள்ளார்.
இதையும் படிங்க: தலைவிரித்தாடும் ரவுடிகள் அட்டகாசம்... அலறி ஓடும் மக்கள்... EPS கடும் தாக்கு...!
ஆட்சி முடியும் தருவாயிலாவது தமிழக விவசாயிகளுக்குத் திமுக செய்து வரும் தொடர் பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். விவசாயிகள் விரோத போக்கை திமுக அரசு கடைபிடிப்பதாகவும் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விவசாயிகள் நலன் காக்க... நெல் ஈரப்பதத்தை உயர்த்துங்கள்... பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்...!