சந்து பொந்துகளில் சமத்துவம் பேசும் திமுக...! வேலைக்கேற்ற ஊதியம் தர கசக்குதா? நயினார் கேள்வி..!
அரசின் மொத்த கஜானாவை காலி செய்த திமுகவை மக்கள் துரத்தியடிப்பார்கள் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறி முழக்கங்களை எழுப்பி ஆவேசத்தை வெளிப்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயன்றதால் ஆசிரியர்கள் மிகவும் ஆவேசம் அடைந்தனர்.
இதனிடையே, வேலைக்கேற்ற ஊதியம் வழங்குவதில் விடியா அரசுக்கு என்ன சிக்கல் என தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். சந்து பொந்துகளில் எல்லாம் சமத்துவம் பேசும் திமுக அரசு, சமவேலைக்கு சமஊதியம் கேட்டுப் போராடிய இடைநிலை ஆசிரியர்களின் மீது அடக்குமுறையை ஏவி அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலின் போது இடைநிலை ஆசிரியர்களுக்கு சமஊதியம் வழங்கப்படும் என வாக்குறுதி எண் 311-இல் கூறியதை மறந்துவிட்டு ஆசிரியர்கள் முதல் செவிலியர்கள் வரை அனைவரையும் சமவேலைக்கு சமஊதியம் கேட்டுப் போராடும் அவல நிலைக்குத் தள்ளுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியின் அம்சமா என்று கேள்வி எழுப்பினார். வீண் செலவுகளுக்கும் வெற்று விளம்பரங்களுக்கும் பணத்தை வாரி இறைக்கும் திமுக அரசுக்கு அரசு ஊழியர்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தை வழங்குவதற்கு மட்டும் கசக்கிறதா என்று கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராட்டம்... இடைநிலை ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக கைது...!
காலியாகக் கிடக்கும் அரசுப் பணியிடங்களைச் சொன்னபடி நிரப்பாமல், பணியில் இருப்பவர்களுக்கு முறையான ஊதியம் வழங்காமல், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பலன்களை விடுவிக்காமல் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையே பழுதாக்கியது தான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை என்று சாடினார். இப்படி மக்களின் வரிப்பணத்தையும் அரசு ஊழியர்களின் ஊதியப் பணத்தையும் கொள்ளையடித்தது மட்டுமன்றி, அரசின் கஜானாவை மொத்தமாக காலி செய்த திமுக அரசை வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் துரத்தியடிக்கப் போவது நிச்சயம் என்று கூறினார்.
இதையும் படிங்க: அரசு பேருந்துகளில் "தமிழ்நாடு" ஸ்டிக்கர்... நாம் தமிழர் கட்சியினர் அதிரடி கைது...!