×
 

ஒரு டிக்கெட் ரூ.7,500? நடுத்தர மக்கள் வயித்தெறிச்சல் சும்மா விடாது... நயினார் கண்டனம்..!

ஆம்னி பேருந்து கட்டண கொள்ளை நடப்பதாக நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொங்கல் விடுமுறை தொடங்கும் முன்பே சென்னை, கோவை, பிற நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கினாலும், ரயில் டிக்கெட் கிடைப்பது கஷ்டம் என்றால் பலரும் ஆம்னி பேருந்துகளை நம்பியே செல்வார்கள். இந்த நேரத்தில் தேவை அதிகரிப்பதைப் பயன்படுத்தி, சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவது வழக்கமாகிவிட்டது.

உதாரணமாக, சென்னையிலிருந்து மதுரைக்கு வழக்கமான காலத்தில் 700-1000 ரூபாய் இருக்கும் கட்டணம், பொங்கல் நெருங்கும்போது 3000 ரூபாய் வரைக்கும் செல்லும். கோவைக்கு 1000 ரூபாயிலிருந்து 3500 ரூபாயாகவும், நெல்லைக்கு 1400 ரூபாயிலிருந்து 4000 ரூபாய் அல்லது அதற்கு மேலும் உயர்வது புகார்களில் அடிக்கடி வருகிறது. சில சமயங்களில் ஏசி ஸ்லீப்பர் பேருந்துகளில் ஒரு டிக்கெட் 5000 ரூபாய் வரைக்கும் கேட்பதாகவும் பயணிகள் கூறியுள்ளனர். இதனால், பண்டிகையை கொண்டாட வெளியூர்களுக்கு செல்லும் மக்கள் இந்த கட்டண கொள்ளையால் கடும் இன்னலுக்கு ஆளாவதாக கூறப்பட்டு வருகிறது.

இதனிடையே, திமுக ஆட்சியில் ஆம்னி பேருந்துக் கட்டணக் கொள்ளை தொடர்வதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று நெல்லையில் இருந்து சென்னை வருவதற்கான ஆம்னி பேருந்தில் ஒரு நபருக்கு 7,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வெளிவந்துள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்றும் கூறினார்.

இதையும் படிங்க: ஆட்டு மந்தையில் ஓநாய்..! பெண்கள் பாதுகாப்பை சூறையாடும் திமுக... நயினார் தாக்கு..!

பொங்கல், தீபாவளி என அனைத்துப் பண்டிகைக் காலங்களிலும், ஆம்னி பேருந்துக் கட்டணம் விண்ணைத் தொடுவதும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதும், கண் துடைப்புக்காக திமுக அமைச்சர்கள் ஆம்னி கட்டண உயர்வை எச்சரிப்பதும் தொடர்கதையாகி வருகிறதே தவிர, மக்களின் பணம் சுரண்டப்படுவது நின்றபாடில்லை என்று நயினார் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

பண்டிகை தினத்தன்று தன் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டுத் திரும்ப நினைக்கும் ஒரு குடும்பத்தின் மாதச் சம்பளத்தை ஆம்னி பேருந்துக் கட்டணம் மூலம் பறித்துவிட்டு வேடிக்கை பார்க்கும் திமுக அரசை, நடுத்தர வர்க்க மக்களின் வயிற்றெரிச்சலே விரைவில் வீழ்த்தும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். 

இதையும் படிங்க: உங்க REPORT CARD வாக்குறுதி என்ன ஆச்சு? சொல்லுங்க ஸ்டாலின்.. நயினார் சரமாரி கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share