நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!
நெல்லை மாவட்டத்தில் வாக்குப்பதிவுகள் முடிந்து 22 மணி நேரங்கள் ஆகியும் முழுமையான வாக்கு சதவீத விபரத்தை வெளியிடவில்லை.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்து 22 மணி நேரங்கள் கடந்த நிலையிலும், திருநெல்வேலி மாவட்டத்திற்கான முழுமையான மற்றும் தொகுதிகள் வாரியான வாக்கு சதவீத விபரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் தரப்பில் தரவுகளைச் சரிபார்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி முதல் 1678 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது. கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, நெல்லை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தரப்பில் தோராயமாக 77.93 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றதாக முதற்கட்ட தகவல்கள் வெளியிடப்பட்டன. இருப்பினும், டோக்கன் பெற்று இரவு வரை வாக்களித்தவர்களின் எண்ணிக்கை இன்னும் இதில் சேர்க்கப்படவில்லை.
இதையும் படிங்க: பாளையங்கோட்டை அரிவாள் வெட்டுச் சம்பவம்: “அரசியல் உள்நோக்கம் இல்லை!” – காவல்துறை அதிரடி விளக்கம்!
தமிழகத்தின் பிற மாவட்டங்கள் இன்று காலை முதலே தங்களது தொகுதிகள் வாரியான இறுதி நிலவரத்தை வெளியிட்டு வரும் நிலையில், நெல்லையில் மட்டும் நீடிக்கும் இந்தத் தாமதம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரிவு அலுவலர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) தரவுகளுடன் ஒப்பிட்டுத் தீவிரமாகச் சரிபார்த்து வருகின்றனர். எவ்விதத் தரவுப் பிழைகளும் இருக்கக் கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக இருப்பதால், இன்று இரவுக்குள் முழுமையான விபரங்கள் வெளியிடப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு முடிந்த இயந்திரங்கள் அனைத்தும் ஏற்கனவே பலத்த பாதுகாப்புடன் நெல்லையில் உள்ள பாதுகாக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு (Strong Rooms) கொண்டு செல்லப்பட்டுள்ளன. அங்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் நேரடிக் கண்காணிப்பில் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டத்தின் இந்த இறுதி வாக்கு சதவீதம், 2021-ஆம் ஆண்டு சாதனையை முறியடிக்குமா என்பதை அறிய மாவட்ட மக்களும் வேட்பாளர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: அடிமை அதிமுக-வின் முதுகில் ஏறி வரும் பாஜக-வைத் தடுப்போம்! நெல்லையில் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின்பிரச்சாரம்!