பள்ளியில் தலைதூக்கும் சாதிய மோதல்... சாதி பெயரை சொல்லி திட்டி +2 மாணவனை கட்டையால் தாக்கிய சக மாணவர்...!
நெல்லை மூலைக்கரைப்பட்டி அரசு பள்ளி மாணவரை சாதியை கூறித் தாக்கிய சக மாணவரால் பரபரப்பு
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பருத்திப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் வேலாண்டி அவரது மனைவி கனகம்மாள். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 3வது குழந்தை பிரவீன் வயது 17. இந்த மாணவர் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக பிரவீன் இடம் அதே பகுதியைச் சார்ந்த ஒரு 17 வயது சக மாணவன் அடிக்கடி சாதிய ரீதியான தாக்குதல் நடத்தி இருக்கிறார். அதனைத் தொடர்ந்து அவ்வப்போது மோதல்கள் நடைபெற்று வந்திருக்கிறது.
இந்நிலையில் இன்று காலையில் பிரவீன் குடிநீர் குழாயில் தண்ணீர் குடிப்பதற்காக சென்றிருக்கிறார். அப்பொழுது அந்த மாணவரும் குடிநீர் குழாயில் தண்ணீர் குடிக்க செல்லும் பொழுது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: "மிசா, எமர்ஜென்சியை பார்த்த கட்சி தி.மு.க"..! தவெக சரிவை சந்திப்பது உறுதி..! உதயநிதி திட்டவட்டம்..!
அப்பொழுது பிரவீனை சக மாணவர் அருகில் இருந்த கட்டையை எடுத்து தலையில் அடித்து தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு உடனடியாக அக்கம்பக்கத்தினர் மாணவர் பிரவினை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்காக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக பிரவீனின் உறவினர்கள் மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பிச்சென்ற பள்ளி மாணவரை தேடி வருகின்றனர்.
மேலும் தொடர்ச்சியாக பள்ளிக்கு வரும்பொழுது பிரவீனிடம் மாற்று சமூகத்தைச் சார்ந்த அந்த மாணவர் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அடித்து தாக்குதல் நடத்தும் பொழுதும் ஜாதியை கூறிய தாக்கி இருப்பதாக காயம் அடைந்த மாணவனின் உறவினர்கள் வேதனையோடு தெரிவித்தனர்.
மேலும் தாங்கள் நலிந்த சமுதாயம் என்பதால் அந்த பகுதியில் வாழ்வதற்கே எங்களுக்கு அச்சமாக இருப்பதாக காயம் அடைந்த மாணவனின் தாய் கண்ணீரோடு தெரிவித்தார். இதுபோன்று தாக்குதல் நடத்தி இருக்கின்ற சம்பவம் நெல்லை மாவட்டத்தில் அடிக்கடி நடைபெற்று வருகிறது ஆகவே அதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லையில் பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் ஜாதி ரீதியான ஒடுக்குமுறை சம்பவங்கள் இன்னும் நடைபெற்று தான் கொண்டிருக்கிறது இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: விஜய் ஆட்சியிலும் விடிவில்லையா?... கண்ணுக்கு முன்பு களவு போகும் பல நூறு கோடி... எதிர்கால சந்ததிக்கு பேரிடி...!