நாளை முதல் ஆட்டம் ஆரம்பம்... தீபாவளி அன்று வெளியானது முக்கிய எச்சரிக்கை...!
வடகிழக்கு பருவமழை, தமிழகம்-புதுவை-காரைக்கால் பகுதிகள், கேரளா – மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திர பிரதேச பகுதிகளில் வரும் 16-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை அதிகாரப்பூர்வமாக தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன்மூலம், கடந்த ஜூன் மாதத்தில் கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தனது பயணத்தை முடித்து விலகப் போகிறது. பொதுவாக செப்டம்பர் இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்கு பருவமழை, மேற்குக் காற்றின் தாக்கத்தால் அக்டோபர் மாதம் வரையிலும் நீடித்தது.
நேற்றும் தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த இரு தினங்களில் விலகக்கூடும் என்றும், அதே சமயம், வடகிழக்கு பருவமழை, தமிழகம்-புதுவை-காரைக்கால் பகுதிகள், கேரளா – மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திர பிரதேச பகுதிகளில் வரும் 16-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: #rainalert: வெளுக்க போகுது மழை... குடை எடுத்தாச்சு... 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
இதற்கிடையில், தென்மேற்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, வரும் 19-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் கேரள – கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மேலும், அக்டோபர் 16ம் தேதி கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்காக மேற்கண்ட மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை நிலை 20ம் தேதி வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: #weatherupdate: வெளுக்க போகுது மழை... 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...!