100 கோடி நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... சிக்கிய 3 பேருக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்...!
பழனி ரூ.100 கோடி மடம் நிலம் மோசடி பத்திரப்பதிவு வழக்கு; 3பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
பழனி தண்டபாணி மடத்துக்கு சொந்தமான நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முருகதாஸ், அன்வர்தீன் மற்றும் சேதுபதி ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து திண்டுக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி உத்தரவு
திண்டுக்கல் மாவட்டம் பழநி பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் இதுவரை நடந்த விசாரணையின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், மோசடியாக நிலம் வாங்கிய திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளம் வெள்ளத்துரை, பழநி புதுார் சேதுபதி, பத்திரம் தயாரித்து கொடுத்த வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகிய நால்வரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் பழனி நில மோசடி விவகாரம்... கையில் ஆவணத்துடன் சிபிசிஐடி-யிடம் வந்த முக்கிய அதிகாரி...!
இந்த நிலையில் நேற்று (06.08.26) ஜஸ்டின் மணிகண்டன் கொடைக்கானலில் வைத்து சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின் உடல்நிலை சரியில்லாத திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை இன்று (07.08.26) மருத்துவமனையில் நேரில் பார்வையிட்ட திண்டுக்கல் நீதிமன்ற நீதிபதி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மோசடியில் தொடர்புடைய பத்திர எழுத்தர் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் வெளிமாநிலத்தில் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசார் 5 தனிப்படை அமைத்து தமிழகம் மற்றும் வெளிமாநிலத்தில் முகாமிட்டு தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு முருகதாஸ், சேதுபதி, அன்வர்தீன் தரப்பில் திண்டுக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று 07.08.26 மேஜிஸ்திரேட் பாக்கியராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது
அப்போது மூன்று நபர்களின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து மேஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
ஏற்கனவே வெள்ளை துறையின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளதுரை முருகதாஸ் சேதுபதி மற்றும் அன்வர்தீன் ஆகிய நால்வருக்கும் இன்று (07.08.26) மதியம் வரை சிபிசிஐடி போலீசார் காவலில் விசாரணை செய்ய திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
இந்த நிலையில் இன்று ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் 4 நபர்களும் மாலை மதுரை சிறைச்சாலையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: #BREAKING சிக்கிய முக்கிய அதிகாரிகள்... பழனி கோயில் நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!