#BREAKING விடிந்ததுமே அதிரடி ஆக்ஷன்... அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மீது அவதூறு பரப்பிய நபர் அதிரடி கைது...!
அமைச்சர் ரமேஷ் உறவினர் குறித்து சோசியல் மீடியாவில் அவதூறு பரப்பியதாக வினோத் சூர்யகுமார் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நில மோசடி விவகாரத்தில் அமைச்சர் குறித்து அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே இந்த பழனி கோயில் நிலம் மோசடி விவகாரம்தான் விஸ்வரூபமெடுத்து வருகிறது. பழனி முருகன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள, கார் நிறுத்துமிடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த 1.40 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம், இந்து சமய அறநிலையத்துறையின் ஆட்சேபனைக்குரிய ஆணை இருக்கும் நிலையிலும் கடந்த ஜூலை 6ம் தேதி விதிமுறைகளுக்கு மாறாக முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய 3 தனிநபர்களின் பெயர்களில் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
இதற்காக பழனி சார்பதிவாளர் அலுவலகத்தின் வழக்கமான அதிகாரி திடீரென விடுமுறையில் செல்ல, ஜூலை 6-ஆம் தேதி ஒரே ஒரு நாள் மட்டும் கூடுதல் பொறுப்பாக ஜஸ்டின் மணிகண்டன் என்பவர் வந்து பத்திரப்பதிவை செய்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை ஏற்கனவே இந்த நிலத்தைப் பதிவு செய்யக் கூடாது என 2025 மற்றும் 2026-ல் நான்கு முறை முடக்க உத்தரவுகளை அனுப்பியிருக்கிறது. முந்தைய நாள் கூட மாவட்டப் பதிவாளருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வளவு எச்சரிக்கைகள் சிஸ்டத்தில் இருக்கும்போது, ஒரே ஒரு நாள் டூட்டிக்கு வந்த அதிகாரிக்கு, இந்த ₹100 கோடி நிலத்தை மட்டும் எவ்வித தங்குதடையுமின்றி கிரயம் செய்து கொடுக்க எப்படித் துணிச்சல் வந்தது? என்ற கேள்வி எழுந்தது.
இதையும் படிங்க: அமெரிக்கர்களை காசு கொடுத்து தூண்டிவிடும் இஸ்ரேல்... ஈரான் போருக்கு பின்னால் பகீர் சதி... ஜே.டி.வென்ஸ் குற்றச்சாட்டு...!
இதனிடையே இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரது உறவினர்கள் தான் நிலத்தை வாங்கியிருப்பதாகவும் சோசியல் மீடியாக்களில் தகவல்கள் பரவின. இதனையடுத்து அறநிலையத்துறை அவசர, அவசரமாக வெளியிட்ட அறிக்கையில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மடத்திற்குச் சொந்தமான நிலத்தை சில தனிநபர்கள் சட்டவிரோதமாக பதிவு செய்ய முயன்றது தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை ஏற்கனவே உரிய நிர்வாக நடவடிக்கைகளையும், காவல்துறை விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் மீது அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இயங்குபவர்கள் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அமைச்சரின் உறவினர்கள் என்றும், அமைச்சருக்கு தெரிந்தே இந்த சம்பவம் நடந்ததாகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பரப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால், அமைச்சருடன் எந்தத் தொடர்பும் இல்லாத ஒரு விவகாரத்தில், திட்டமிட்டு அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை பரப்பிய நபர்கள் மற்றும் அதனை வெளியிட்ட சமூக வலைதள கணக்குகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும், பொய்யான தகவல்களை பரப்பியவர்கள் மீது விரைவில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அமைச்சர் ரமேஷ் உறவினர் குறித்து சோசியல் மீடியாவில் அவதூறு பரப்பியதாக வினோத் சூர்யகுமார் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பழனி கோயில் நில விவகார் தொடர்பாக போலியான, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் என சைபர் க்ரைம் போலீசார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், சோசியல் மீடியாவில் பழனி கோயில் மடத்துக்குச் சொந்தமான நில மோசடி விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் மற்றும் அவரது உறவினர்களுக்கு தொடர்பு இருப்பதாக வினோத் சூர்யகுமார் பதிவிட்டதால் அவர் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரே நேரத்தில் டபுள் பேரிடி... சில்லு சில்லாய் சிதறும் பாகிஸ்தான்... அடி மேல் அடி வாங்கும் ஷெரீப் அரசு...!