பழனியில் ஒரே நேரத்தில் 4 இடங்களில் களமிறங்கிய சிபிசிஐடி... 8 மணி நேர சோதனையில் நடந்தது என்ன?
நிலத்தை வாங்கிய இருவரில் ஒருவரான சேதுபதியின் டி.கே.என்.புதூர் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பழனி அறக்கட்டளை நில மோசடி வழக்கு: பழனியில் நான்கு இடங்களில் சிபிசிஐடி அதிரடி சோதனை – பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரணை நிறைவு.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுடன் தொடர்புடைய அறக்கட்டளை நில மோசடி வழக்கில், சிபிசிஐடி போலீசார் இன்று பழனியில் நான்கு இடங்களில் ஒரே நேரத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையை சிபிசிஐடி எஸ்பி ஷாஜிதா தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்டனர்.
பழனியில் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் முறைகேடாக வெறும் ரூ.2 கோடி மதிப்பில் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதன் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள், பத்திரப்பதிவு நடைமுறைகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பழனி கோவில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை வீட்டை ‘சுத்து’ போட்ட சிபிசிஐடி.. சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!
இதன் தொடர்ச்சியாக, பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் இன்று பல மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. அங்கு பத்திரப்பதிவு தொடர்பான அசல் ஆவணங்கள், பதிவேடுகள், கணினி பதிவுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தேவையான ஆவணங்களின் நகல்களும் சேகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 8 மணி நேரம் நடந்த சோதனை பின்னர் நிறைவடைந்தது.
அதே நேரத்தில், சர்ச்சைக்குரிய பத்திரப்பதிவில் சாட்சிகளாக கையெழுத்திட்டதாகக் கூறப்படும் லட்சுமணன் மற்றும் மயில்சாமி ஆகியோரின் வீடுகளிலும் சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக சோதனை மேற்கொண்டனர். அங்கு வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், நிலத்தை வாங்கிய இருவரில் ஒருவரான சேதுபதியின் டி.கே.என்.புதூர் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த நில மோசடி வழக்கு தொடர்பாக ஏற்கனவே 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றச்சாட்டுக்குட்பட்ட நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிபிசிஐடி விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், இந்த வழக்கில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பழனி நில மோசடி: சமையல்காரர் வீட்டிற்குள் தடாலடியாக நுழைந்த சிபிசிஐடி... கதவு, ஜன்னல்களை அடைத்து ரகசிய விசாரணை... பின்னணி என்ன?