தீபாவளி செலவுக்கு நடுவே அதிர்ச்சி.. அரிசி விலை கிலோ ரூ.100-ஐ தாண்ட வாய்ப்பா..?? திணறும் குடும்ப பட்ஜெட்..!!
விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
பாமாயில் விலை குறையாமல் இருப்பதோடு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், தமிழக மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் இந்த நேரத்தில், குடும்பச் செலவுகள் மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. மளிகைப் பொருட்கள், காய்கறிகள் விலை உயர்வால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களுக்கு, அரிசி விலை உயர்வு கூடுதல் சுமையாக அமைந்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களில் தமிழ்நாட்டில் அரிசி விலை நான்காவது முறையாக உயர்ந்துள்ளது. ஒரு மூட்டை அரிசியின் விலை ரூ.300 முதல் ரூ.600 வரை அதிகரித்துள்ளது. உதாரணமாக, ரூ.1,400-க்கு விற்கப்பட்ட டீலக்ஸ் பொன்னி அரிசி இப்போது ரூ.1,800 ஆகவும், ரூ.1,600 பொன்னி அரிசி ரூ.1,950 ஆகவும், ரூ.1,900 வெள்ளை பொன்னி ரூ.2,300 ஆகவும் உயர்ந்துள்ளது.
இட்லி அரிசி ரூ.900-லிருந்து ரூ.1,200 ஆகவும், பச்சரிசி ரூ.1,500-லிருந்து ரூ.1,800 ஆகவும், 25 கிலோ சிவாஜி பொன்னி ரூ.1,800-லிருந்து ரூ.2,400 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த உயர்வு தொடர்ந்தால், தீபாவளிக்கு முன் ஒரு கிலோ அரிசி ரூ.100-ஐ தாண்டும் வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் எச்சரிக்கின்றனர். காரணங்கள் பல. அரிசி ஆலைகளில் நெல் கையிருப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தில் நெல் விளைச்சல் போதிய அளவில் இல்லை. வேலை ஆட்கள் பற்றாக்குறை, மின் கட்டண உயர்வு காரணமாக சில நவீன ஆலைகள் மூடப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு வந்தது புதிய வாய்ப்பு? 2036 ஒலிம்பிக் கனவுக்காக களத்தில் இருக்கும் நாடுகள்! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
தமிழகத்தின் ஆண்டு அரிசி தேவை சுமார் 95 லட்சம் டன் என்ற நிலையில், உள்ளூர் உற்பத்தி போதாததால் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அரிசி கொண்டு வரப்படுகிறது. ஆனால் வெளிமாநில வாகனங்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை தொடர்ந்தால் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என வணிகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டலத் தலைவர் சண்முகம், வெளிமாநில அரிசி வருகையைத் தடுக்காமல் விலை கட்டுப்பாடு மற்றும் நெல் உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அரிசியுடன் பருப்பு, சமையல் எண்ணெய் விலையும் உயர்ந்து வருகிறது. ரேஷன் பாமாயில் லிட்டருக்கு ரூ.148 ஆக உள்ளது. பண்டிகை பலகாரங்களுக்கு தேவையான பொருட்கள் விலை உயர்ந்தால் குடும்பச் செலவு மேலும் உயரும். அரசு உடனடி நடவடிக்கை எடுத்து விலையைக் குறைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
இதையும் படிங்க: ஆடிட்டர் செய்த தவறுக்காக முதல்வர் விஜய் வெற்றியை ரத்து செய்ய முடியுமா?: ஐகோர்ட் கேள்வி!