பொங்கல் அன்று போராட்டம்.. ஆசிரியர்களைக் குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்; கொந்தளிக்கும் குடும்பங்கள்!
பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி, இன்றும் சென்னை DPI அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
பொங்கல் திருநாளில் மகிழ்ச்சியாக இல்லங்களில் இருக்க வேண்டிய பகுதிநேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் கோரி சென்னை டிபிஐ (DPI) வளாகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகத் தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து அறப்போராட்டம் நடத்தி வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு, சக ஆசிரியர் கண்ணனின் மரணம் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று தைப்பொங்கல் பண்டிகை தினத்திலும் போராட்டத்தைக் கைவிடாமல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் கோஷங்களை எழுப்பினர். நிலைமை கைமீறிப் போவதைத் தடுக்கவும், போராட்டத்தைக் கலைக்கவும் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு, ஆசிரியர்களைக் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று வாகனங்களில் ஏற்றி வருகின்றனர்.
அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும், உயிரிழந்த ஆசிரியர் கண்ணனின் குடும்பத்திற்கு உரிய நஷ்டஈடு வழங்கக் கோரியும் இன்று அதிகாலை முதலே ஆசிரியர்கள் டிபிஐ அலுவலகத்தை நோக்கித் திரண்டனர். “ஊரே பொங்கல் கொண்டாடும் போது நாங்கள் மட்டும் ஏன் கண்ணீரோடு வீதியில் கிடக்க வேண்டும்?” என ஆசிரியர்கள் எழுப்பிய ஆவேசக் குரல்கள் அந்தப் பகுதியையே அதிரச் செய்தன. பேச்சுவார்த்தைக்கு அரசு முன்வராத நிலையில், தடையை மீறி முற்றுகையிட முயன்ற ஆசிரியர்களைப் போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.
இதையும் படிங்க: ஆசிரியர் கண்ணன் உடலை பார்க்கணும்... போராடிய பகுதிநேர ஆசிரியர்கள் அதிரடி கைது..!
பெண் ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளையும் பொருட்படுத்தாமல் போலீசார் அள்ளியெறிந்ததாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் எதிரொலியாகச் சென்னை டிபிஐ வளாகத்தைச் சுற்றி ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போராடும் ஆசிரியர்கள்... நீளும் கோரிக்கை..! அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை..!