×
 

“மார்ச் 1-ல் மதுரையில் பிரதமர் மோடி மாநாடு!” சேலத்தில் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் NDA கூட்டணியின் பொதுக்கூட்டம், தவிர்க்க முடியாத காரணங்களால் பிப்ரவரி 28-லிருந்து மார்ச் 1-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் 'நமோ பவுண்டேஷன்' மற்றும் 'பாஜக விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு' சார்பில் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியைப் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரதமர் மோடியின் தமிழக வருகை மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் வியூகங்கள் குறித்துப் பல்வேறுத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, 

மதுரையில் நடைபெறவிருந்தத் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்டப் பொதுக்கூட்டம், பிப்ரவரி 28-லிருந்து ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டு மார்ச் 1-ஆம் தேதி நடைபெறும். பிரதமர் நரேந்திர மோடி இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதுடன், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கும் செல்ல வாய்ப்புள்ளது.

"தமிழக மக்கள் மத்தியில் தற்போது பெரிய மனமாற்றம் ஏற்பட்டுள்ளது; இது வரும் சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய ஆட்சி மாற்றமாக முடியும்" என நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார். 2026 தேர்தல் திமுக-விற்கு ஒரு மிகப்பெரிய இழப்பாக அமையும் என்றும் அவர் எச்சரித்தார்.

இதையும் படிங்க: “தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி வழங்குக!” பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதியக் கட்சிகள் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. இதற்காக வி.பி. துரைசாமி மற்றும் ஜி. பாலச்சந்திரன் ஆகியோர் அடங்கிய இரண்டுப் பேர் கொண்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பாஜக-விற்கு ஆதரவு அளிக்கும் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்.

விருதுநகர் திமுக மாநாட்டுப் பேச்சுகள் மற்றும் செயல்பாடுகளை விமர்சித்த அவர், "தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை" எனக் குற்றம் சாட்டினார். மேலும், திருக்கோவில்களில் பணிகள் முடிவடையாமலேயே அவசரகதியில் குடமுழுக்கு நடத்துவது தவறு என்றும், இது அந்த ஆட்சிக்கு நல்லதல்ல என்றும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் பாஜக மாநிலத் துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மதுரையில் நடைபெறவுள்ள இந்த மாநாடு, தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய உத்வேகத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்தும் என பாஜகவினர் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிங்க: ஸ்டாலின் கனவு உலகத்தில் இருக்கிறார்! கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேட்டி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share