“தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி வழங்குக!” பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தியும் மத்திய அரசு நிதி ஒதுக்காததால், பிரதமர் தலையிட்டு உடனடி நிதி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் மத்திய அரசினால் அனுமதிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிதியைத் தாமதமின்றி முன்னுரிமை அடிப்படையில் விடுவிக்க வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். ஊடகங்களில் பரவி வரும் உண்மைக்குப் புறம்பான தகவல்களுக்குத் தெளிவுபடுத்தும் விதமாகவும், நிலுவையில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கவும் இந்தப் புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் முதலமைச்சர் கூறியுள்ளதாவது,
தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்காக மொத்தம் 2500.61.06 ஹெக்டேர் நிலங்களைக் கையகப்படுத்த நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் 931.52.96 ஹெக்டேர் நிலங்களுக்கு ரயில்வே துறை இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. 19 முக்கிய ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான 1273.05.15 ஹெக்டேர் நிலங்களில், சுமார் 94 விழுக்காடு (1198.02.34 ஹெக்டேர்) நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு ரயில்வே துறையிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன.
திண்டிவனம்-நகரி, மதுரை-தூத்துக்குடி, மணியாச்சி-நாகர்கோவில், சென்னை கடற்கரை - கொருக்குப்பேட்டை 3/4-வது வழித்தடம் உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட முக்கியத் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
இதையும் படிங்க: “விஜய் இன்னும் விசில்தான் அடித்துக் கொண்டிருக்கிறார்!” மதுரையில் நயினார் நாகேந்திரன் விளாசல்!
ரயில்வே அமைச்சகம் நிதியை முழுமையாக வழங்காமல், பகுதிப் பகுதியாக (Piecemeal manner) விடுவிப்பது திட்டப் பணிகளில் பெரும் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நில உரிமையாளர்களுக்கு நீடித்த நிச்சயமற்ற நிலையை உருவாக்குகிறது. திருவனந்தபுரம் - கன்னியாகுமரி இருவழிப்பாதை திட்டத்திற்கு நில இழப்பீடு வழங்கத் தேவையான 289.78 கோடி ரூபாய் நிதியை ரயில்வே துறை இன்னும் வழங்கவில்லை.
ரயில்வே துறையினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி - மதுரை (அருப்புக்கோட்டை வழி) மற்றும் திண்டிவனம் - திருவண்ணாமலை புதிய அகல ரயில் பாதை திட்டங்களை மீண்டும் தொடங்கித் தேவையான நிதியை வழங்க வேண்டும்.
இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டின் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, கூடுதல் புதிய ரயில்வே திட்டங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். கூட்டுறவுக் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் பிரதமர் இதில் தலையிட்டு உரிய அறிவுரைகளை ரயில்வே அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை - தமிழக அரசு அரசாணை!