சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு... ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கி செயின் பறிப்பு...!
இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவலரை தாக்கி செயின் பறிப்பு.
ஆயுதத்தால் தாக்கியதில் காவலர் படுகாயம் அடைந்த நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. காவலரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் உள்ள கைலாசநாதர் மலை கோவில் பகுதியில் நேற்று இரவு தென்கரை காவல் நிலையத்தை சேர்ந்த சசிகுமார் என்ற காவலர் இருசக்கர வாகன பேட்ரோல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்பொழுது கைலாசநாதர் மலைக்கோவில் அடிவாரத்தில் சந்தேகக்கும்படியாக நின்றிருந்த இரு நபர்களை விசாரித்த பொழுது அவர்களிடம் கடப்பாரை கம்பி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதை பார்த்த காவலர் அவர்களை தரையில் அமர உத்தரவிட்டுள்ளார். அந்த நேரத்தில் அங்கு மறைந்திருந்த இரு நபர்கள் காவலரின் பின்புறமாக வந்து அவர்கள் வைத்திருந்த கம்பி உள்ளிட்ட ஆயுதத்தால் காவலரின் தலையில் பலமாக தாக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: ஏய்.. ஏய்... என்ன?... போலீசுடன் விசிகவினர் மல்லுக்கட்டு... முக்கிய நிர்வாகி சட்டை கிழந்ததால் முற்றிய மோதல்...!
இருந்த போதும் காவலர் நான்கு நபர்களிடமும் போராடியுள்ளார். ஆனால் நான்கு பேரும் ஒன்றிணைந்து அவர்கள் வைத்திருந்த ஆயுதத்தால் பலமாக காவலரை தாக்கியுள்ளனர். இதில் காவலர் சசிகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
காவலரை தாக்கிய அந்த மர்ம கும்பல் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதனைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த காவலர் சசிகுமார் தென்கரை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். காயமடைந்த காவலர் சசிகுமாருக்கு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் தற்பொழுது காவலர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
ரோந்து பணியில் ஈடுபட்ட காவலரை தாக்கி செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம கும்பலை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: LIC பெண் ஏஜென்டின் காரை கொளுத்திய போலீஸ்..! ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவு..!!