×
 

“மதுரையில் வெடித்தது கூட்டணி மோதல்!” - திமுக எம்.எல்.ஏ-விற்கு எதிராக காங்கிரஸ் சுவரொட்டி யுத்தம்!

“தன்மானம் காக்க களம் காணும் காங்கிரஸ்” - கோ.தளபதியின் விமர்சனத்திற்கு மாணிக்கம் தாகூர் தரப்பு அதிரடிப் பதிலடி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளுங்கட்சியான திமுக-வும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் மதுரையில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. மதுரை வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கோ.தளபதியின் சர்ச்சை பேச்சைத் தொடர்ந்து, அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக அந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வாக்கு சேகரிக்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி 25-ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் பேசிய திமுக மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி, காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடினார். காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமாக ஓட்டு வங்கி இல்லை என்றும், பூத் கமிட்டி அமைக்கக் கூட ஆட்கள் இல்லாத கட்சி என்றும் அவர் விமர்சித்தார்.

ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ் எம்.பி-க்களான மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி ஆகியோருக்கு வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார். கோ.தளபதியின் இந்தப் பேச்சு காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலடி கொடுத்த காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், கோ.தளபதிக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:  "திமுக கோட்டைக்கு விடுக்கப்பட்ட சவால்!" – ராயப்பேட்டையில் தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் அதிரடி தீர்மானங்கள்

காங்கிரஸின் தன்மானத்தைக் காக்க மதுரை வடக்கு தொகுதியில் இந்த முறை காங்கிரஸ் வேட்பாளரேப் போட்டியிட வேண்டும்; இது குறித்து அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் வலியுறுத்துவேன் என அவர் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டார்.

மாணிக்கம் தாகூரின் கருத்தை வழிமொழியும் விதமாக, மதுரை வடக்கு தொகுதி முழுவதும் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு கேட்டு அக்கட்சியினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். திமுக எம்.எல்.ஏ-வின் ஆணவப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இந்தக் கூட்டணி விரிசல் மதுரையின் தேர்தல் களத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

இதையும் படிங்க: டெல்லியில் ராகுல் - கனிமொழி மீட்டிங்..!! காங்.-க்கு எத்தனை தொகுதிகள்..!! வெளியான முக்கிய தகவல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share