"திமுக கோட்டைக்கு விடுக்கப்பட்ட சவால்!" – ராயப்பேட்டையில் தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் அதிரடி தீர்மானங்கள்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தலைநகர் சென்னையை மையமாக வைத்துத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது அரசியல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
சென்னையில் நேற்று நடைபெற்ற ‘ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில்’, திமுக அரசின் நிர்வாகத் தோல்விகள் குறித்துக் காரசாரமானக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
ராயப்பேட்டையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சென்னையின் தற்போதைய நிலையை முன்வைத்துத் தமிழக அரசுக்கு எதிராகக் கட்சி நிர்வாகிகள் முன்வைத்த முக்கியக் குற்றச்சாட்டுகள் மேயராக இருந்தபோது சிங்கார சென்னை என்றதும், தற்போது முதலமைச்சராக இருக்கும்போது சிங்கார சென்னை 2.O என்று பேசுவதும் வெறும் விளம்பரமே தவிர, களத்தில் எந்த மாற்றமும் இல்லை.
ஒவ்வொரு டிசம்பர் மாதமும் பெய்யும் மழையில் சென்னை மக்கள் தத்தளிப்பதும், குண்டும் குழியுமானச் சாலைகளால் வாகன ஓட்டிகள் விபத்துகளைச் சந்திப்பதும் தொடர்கதையாக உள்ளது. பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாதக் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் வட சென்னை மக்களுக்குக் காட்டப்படும் பாராமுகமான வஞ்சகம் ஆகியவை சென்னையைச் சூழ்ந்துள்ளப் பெரும் சாபங்கள் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. சென்னை தற்போது கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகம் உள்ளக் குற்றத் தலைநகராக மாறியுள்ளது என்றும், ஏழை எளிய மக்கள் தங்களின் வாழ்விட உரிமையை இழந்து தவிப்பதாகவும் தவெக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதையும் படிங்க: "மூன்றாம் ஆண்டில் தவெக!" - பிப்ரவரி 2-ல் விஜய் பங்கேற்கும் பிரம்மாண்ட தொடக்க விழா
சென்னை எங்கள் கோட்டை என்று திமுக கூறி வரும் அதிகார வலிமையை, மக்கள் சக்தியுடன் முறியடிக்கத் தவெக தலைவர் விஜய் களத்தில் இருப்பதாக நிர்வாகிகள் உற்சாகத்துடன் தெரிவித்தனர். 2026-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஏற்படப் போகும் மக்களாட்சி மாற்றம் சென்னையிலிருந்தேத் தொடங்கும் என்பது ராயப்பேட்டை கூட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிச் சின்னமான விசில்’, இனி சென்னை மாநகர் உட்பட ஒட்டுமொத்தத் தமிழகத்தின் வெற்றியின் அடையாளமாக ஒலிக்கப் போகிறது எனச் செயல் வீரர்கள் கூட்டத்தில் சூளுரைக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கானத் தொண்டர்கள் தளபதி விஜய்க்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: “பனையூர் பண்ணையாரே.. ஆகப்பெரும் ஊழல்வாதி நீங்கள்தான்!” விஜய்க்கு அதிமுக கடும் பதிலடி!