×
 

மீண்டும் பவர் கட்.. பெ.சண்முகம் உரையின்போது மின்வெட்டு!! இருளில் மூழ்கிய சிபிஎம் கூட்டம்..!!

மாநிலம் முழுவதும் மின்வெட்டு அதிகரித்து வருவதற்கு நீடித்த கோடை வெப்பமும், காற்றாலை மின் உற்பத்தி குறைவும் முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது. 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தபோது மின்சாரம் தடைபட்டது. இதேபோல், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பங்கேற்ற கூட்டத்திலும் திடீர் மின்வெட்டு ஏற்பட்டு பரபரப்பை உருவாக்கியது.

சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் பெ. சண்முகம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் நின்றது. அரங்கம் இருளில் மூழ்கியதால் அவர் பேச்சை நிறுத்தினார். உடனடியாக ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு நிகழ்ச்சி தொடர்ந்தது. சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு மின்சாரம் மீண்டும் வந்தது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. கும்மிடிப்பூண்டி 33/11 கிலோவோல்ட் துணை மின்நிலையத்தில் உள்ள 33 கிலோவோல்ட் ஏபி சுவிட்ச் கடந்த சனிக்கிழமை முதல் சரியாக செயல்படாததால், செப்டம்பர் 15ஆம் தேதி காலை பழுதுநீக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதற்கு முன், அப்பகுதியின் மின்சாரம் சிப்காட் துணை மின்நிலையத்திலிருந்து மாற்றி அளிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: அதிகாரிகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்க! சிபிஎம் பெ.சண்முகம் அறிக்கை!

இந்த மாற்றத்தின்போது காலை 10.50 முதல் 11.00 மணி வரை சுமார் 10 நிமிடங்கள் மட்டும் மின் தடை ஏற்பட்டதாகவும், பொதுக்கூட்டம் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் வாரியம் தெரிவித்துள்ளது. பின்னர் சுவிட்ச் சரிசெய்யப்பட்டு 12.05 மணியளவில் மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் மின்வெட்டு அதிகரித்து வருவதற்கு நீடித்த கோடை வெப்பமும், காற்றாலை மின் உற்பத்தி குறைவும் முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது. 

தமிழகத்தின் சொந்த அனல் மற்றும் புனல் மின்நிலையங்கள் மூலம் சுமார் 7,400 மெகாவாட் உற்பத்தி திறன் இருந்தாலும், அதில் குறைந்த அளவே உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள தேவையை மத்திய அரசு மற்றும் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்து பூர்த்தி செய்யப்படுகிறது. தற்போது சுமார் 16,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் நிலையில், தேவை 21,000 மெகாவாட்டைத் தாண்டி உள்ளது. வெப்பம் காரணமாக ஏசி மற்றும் நீர்ப் பம்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

அமைச்சர் நிர்மல் குமார் கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சமீபத்திய இரு தினங்களில் பெரிய அளவில் மின்வெட்டு இல்லை என்றும் கூறியிருந்தார். இருந்தபோதிலும், பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் தடை தொடர்கிறது. மக்கள் போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மின்வாரியம் கூடுதல் கொள்முதல் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் மூலம் நிலைமையை சமாளிக்க முயற்சித்து வருகிறது.

இதையும் படிங்க: மக்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதா? மேகமலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பி.சண்முகம் ஆவேசம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share