×
 

மீண்டும் தனியார் பால் விற்பனை விலை உயர்வு..!! பால் தட்டுப்பாடு அபாயம்.. முகவர்கள் சங்கம் எச்சரிக்கை..!!

அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தின.

தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தியுள்ளதை கண்டித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாளை (ஜூலை 9, 2026) முதல் அமலுக்கு வரும் இந்த விலை உயர்வு ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் பால் நுகர்வை கடுமையாக பாதிக்கும் என்று சங்கம் எச்சரித்துள்ளது.

இந்தியா முழுவதும் தொடரும் வரலாறு காணாத பால் உற்பத்தி நெருக்கடியால் தமிழ்நாட்டில் கடுமையான பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு கோடைகால பருவமழை முற்றிலும் பொய்த்துப் போனதால் புல், தீவனம் மற்றும் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு பால் உற்பத்தி பெருமளவில் சரிந்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட பாதிப்பும் இதை மேலும் அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் இடையே பால் கொள்முதலுக்கான போட்டி தீவிரமடைந்துள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதோடு, சிறப்பு ஊக்கத்தொகையும் அளித்து வருகின்றனர். இதன் காரணமாக ஆவினுக்கு பால் வழங்கும் பல உற்பத்தியாளர்கள் தனியாருக்கு திரும்பியுள்ளனர்.

இதையும் படிங்க: ஆபத்து... ஆபத்து...!! - பசுக்களின் அடிமடியில் கைவைத்த எல் நினோ... பால் முதல் வெண்ணெய் வரை காத்திருக்கும் அதிர்ச்சி...!

இதனால் திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு முதலே ஆவினின் தினசரி பால் கொள்முதல் சுமார் 25 லட்சம் லிட்டராக சரிந்துள்ளது. இந்த நிலை இதுவரை மேம்படவில்லை. முன்பு 2020-21ல் அதிமுக ஆட்சியில் இது 43 லட்சம் லிட்டராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

விலை உயர்வுக்கு பின்னணி: தனியார் நிறுவனங்கள் ஏற்கெனவே பிப்ரவரி இறுதியில் லிட்டருக்கு ரூ.2 விலை உயர்த்தியிருந்தன. தற்போது மீண்டும் ரூ.4 உயர்வு ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, வாகன எரிபொருள் விலை அதிகரிப்பு, பால் உற்பத்திக்கான மூலப்பொருட்கள், விநியோக வாகன வாடகை உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துள்ளன. இவை அனைத்தும் தனியார் நிறுவனங்களை விலை உயர்வுக்கு தள்ளியுள்ளன.

முன்னணி தனியார் நிறுவனமான ஆரோக்யா பால் நிறுவனம் ஜூலை 9 முதல் புதிய விலைகளை அறிவித்துள்ளது. அதன்படி:
•  500 மிலி டோன்டு மில்க்: ரூ.29 → ரூ.31
•  500 மிலி ஸ்டாண்டர்டு மில்க்: ரூ.35 → ரூ.37
•  500 மிலி ஃபுல் க்ரீம் மில்க்: ரூ.39 → ரூ.41
•  1000 மிலி டோன்டு மில்க்: ரூ.54 → ரூ.57
•  மற்ற வகைகளிலும் இதே போன்ற உயர்வு
•  500 கிராம் தயிர் விலையும் ரூ.2 உயர்வு
முகவர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கான கமிஷனும் உயர்த்தப்பட்டுள்ளது.

அரசுக்கு வலியுறுத்தல்: தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் ஆரோக்யா நிறுவனத்தை விலை உயர்வை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், வரும் மழைக்காலத்திலும் மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், பால் தட்டுப்பாடு தீவிரமடையும் அபாயம் உள்ளது.

எனவே தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கம் வலியுறுத்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் (2011-16) அம்மையார் ஜெயலலிதா அவர்களால் கொண்டுவரப்பட்ட “விலையில்லா கறவை மாடுகள் திட்டம்” பால் உற்பத்தியை பெருமளவு அதிகரித்தது. இந்த திட்டத்தை திமுக அரசு கைவிட்டதால் உற்பத்தி பாதிப்படைந்ததாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி, பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தவும், ஆவின் விற்பனை விலை மற்றும் கமிஷனை சரியான அளவில் மறுபரிசீலனை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கால்நடை தீவனம், மருத்துவ பராமரிப்பு உள்ளிட்ட ஆதரவுகளையும் வலுப்படுத்த வேண்டும். இந்த நிலையில், பால் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் அரசின் தலையீடு மக்களின் அன்றாடத் தேவையான பாலின் விலையை கட்டுப்படுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஆவின் விநியோக கட்டுப்பாடு... நிலைமை மோசமாகும்..! சிபிஐ வீரபாண்டியன் எச்சரிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share