×
 
☰

பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்: சென்னையில் கனமழை பாதிப்பு குறித்து ஆதவ் அர்ஜுனா ஆய்வு!

சென்னையில் 8 மணி நேரத்தில் 35 செ.மீ மழை கொட்டியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பொதுமக்கள் மழை ஓயும் வரை வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் பெய்து வரும் அதிதீவிர கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அவசரக் கட்டுப்பாட்டு அறையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு மேற்கொண்டார்; முன்னதாக சென்னையில் களமிறங்கியுள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) வீரர்களைச் சந்தித்துப் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான வழிகாட்டுதல்களை வழங்கிய அவர், எழிலகத்தில் செயல்பட்டு வரும் மாநில பேரிடர் கட்டுப்பாட்டு அறை மற்றும் வெள்ள நீர் சூழ்ந்துள்ள பாரிமுனைப் பகுதிகளிலும் நேரில் சென்று நிலைமையைப் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்ததாவது:

"தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், கடந்த இரண்டு மாதங்களாகவே நீர்நிலைகள், கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களைத் தூர்வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், தற்போது சென்னையில் பெய்து வருவது வழக்கமான சாதாரண மழை கிடையாது. குறுகிய கால இடைவெளியான வெறும் 8 மணி நேரத்தில் 35 சென்டிமீட்டர் வரை அதீத கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. குறிப்பாக மணலி, எண்ணூர் மற்றும் பாரிமுனை ஆகிய பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு அதிகனமழை பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: ஒரே இரவில் 30 செ.மீ மழை: வெள்ளத்தில் மிதக்கும் சென்னை - வேளச்சேரியில் இறங்கியது NDRF!

மாநில அரசு மற்றும் மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறைகள் முழுவீச்சில் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மழை தொடர்பான புகார்கள் மற்றும் அவசர உதவிகளுக்கு மாநகராட்சியின் '1913' என்ற கட்டணமில்லா உதவி எண்ணில் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக முதற்கட்டமாக 6 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு, உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை மழை பாதிப்பு நிலவரம் மற்றும் மீட்புப் பணிகள் குறித்துத் தொடர்ந்து கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து 15 மண்டலங்களிலும் தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு, வெள்ள நீர் வெளியேற்றம் மற்றும் மீட்புப் பணிகளை நேரடியாகக் கண்காணித்து வருகின்றனர். மேலும், நகரில் உள்ள பழமையான மற்றும் பலவீனமான கட்டடங்கள் குறித்துக் கணக்கெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்தகைய பழைய கட்டடங்களில் தங்கியுள்ள பொதுமக்களை, மழைக்காலம் முடியும் வரை உடனடியாக நிவாரண முகாம்கள் மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றித் தங்க வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மழைப்பொழிவு தொடர்ந்து நீடித்து வருவதால், பொதுமக்கள் யாரும் தேவையின்றி அச்சமோ பதற்றமோ அடைய வேண்டாம்; அதே சமயம் மழை முழுமையாக ஓயும் வரை அவசியமின்றி யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: அனுமதி மறுத்தால் தடையை மீறாமல் என்ன வழி?: மருத்துவ பணியாளர்கள் கைதை கண்டித்த சிபிஐஎம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share