ராமநாதபுரத்தில் இன்று முதல் 144 தடை! பொதுக்கூட்டம், ஊர்வலங்களுக்கு அதிரடி கட்டுப்பாடு!
இந்த உத்தரவு அக்டோபர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இன்று முதல் தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. பல்வேறு தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள் மற்றும் குருபூஜை நிகழ்வுகளை முன்னிட்டு சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதியின்றி பொதுக்கூட்டம், ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவுநாள் உள்ளிட்ட நிகழ்வுகளும், தேவர் குருபூஜை உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் நினைவுநாள் மற்றும் குருபூஜை நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. இந்த நிகழ்வுகளுக்கு அதிகளவில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் வாடகை வாகனங்களில் வருகை தரும் சூழல் இருப்பதால், போக்குவரத்து பாதிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து பாரதிய நாகரிக பாதுகாப்புச் சட்டம் (BNSS) பிரிவு 163-ன் கீழ், முந்தைய சட்டத்தில் 144 என குறிப்பிடப்பட்ட பிரிவுக்கு இணையான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அக்டோபர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெருவயல் ரெணபலி முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!
குறிப்பாக செப்டம்பர் 9 முதல் 15ஆம் தேதி வரையும், அக்டோபர் 9ஆம் தேதியும், அக்டோபர் 25 முதல் 31ஆம் தேதி வரையும் பிற மாவட்டங்களில் இருந்து ராமநாதபுரத்துக்குள் குறிப்பிட்ட வகை வாகனங்களில் தொண்டர்களை அழைத்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வாடகை மற்றும் சுற்றுலா வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், தற்காலிக சிறப்பு அனுமதி பெற்ற வாகனங்கள், சரக்கு வாகனங்கள், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் முன்னதாக அறிவித்த உத்தரவின் அடிப்படையில், இந்த தடை தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க: கறி விருந்துக்கு அழைத்து கொலை! மனைவியுடன் நெருக்கம் காட்டிய நண்பனின் கதையை முடித்த கணவன்!