×
 

அதிகாலையிலேயே பேரதிர்ச்சி... வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் துப்பாக்கி முனையில் நகை, பணம் கொள்ளை...!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை, பணம் கொள்ளை

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பேரூராட்சிக்கு உட்பட்ட பொன்மலை கோயில் அருகேயுள்ள தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த பெண்ணிடம் துப்பாக்கி முனையில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு சுமார் 8 மணியளவில் முகமூடி அணிந்த இரு மர்ம நபர்கள் தோட்டத்தின் வழியாக வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் அங்கு வசித்து வந்த கலைச்செல்வி என்பவரை துப்பாக்கியால் மிரட்டி, வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர்.

அச்சமடைந்த கலைச்செல்வி, பீரோவில் இருந்த 19 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப் பணத்தை எடுத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கொள்ளையர்கள் அவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: வீரியமெடுத்த ஹார்ட் டிஸ்க் திருட்டு... சிபிசிஐடி வசம் சென்ற விவகாரம்..! கிடுக்கிப்பிடி விசாரணை..!

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல் கண்காணிப்பாளர் விமலா மற்றும் ராசிபுரம் துணைக் காவல் கண்காணிப்பாளர்  உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கலைச்செல்விக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி அருகிலேயே வசித்து வருவதாக கூறப்படுகிறது. தோட்டத்து வீட்டிற்குச் செல்லும் பாதை பூட்டப்பட்டிருந்த நிலையிலும், கொள்ளையர்கள் தோட்டத்தின் வழியாக உள்ளே நுழைந்து இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வெளிநாட்டில் வேலை பார்ப்பவர் வீட்டில் கைவரிசை... 100 சவரன் தங்க நகைகள், 6 லட்ச மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கொள்ளை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share