×
 

அன்புமணி ராமதாஸ் மீதான வழக்குக்கு இடைக்கால தடை! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரியலூர் டால்மியா சிமெண்ட் சுரங்கத்திற்குள் அனுமதியின்றி நுழைந்ததாக அன்புமணி ராமதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் வழக்கறிஞர் கே. பாலு ஆகியோர் மீது பதியப்பட்ட வழக்கின் விசாரணைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது. அரியலூர் டால்மியா சிமெண்ட் நிறுவனச் சுரங்க விவகாரத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில், பாமக தலைமைக்கு இந்த உத்தரவு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

அரியலூர் பகுதியில் செயல்பட்டு வரும் டால்மியா சிமெண்ட் நிறுவனத்திற்குச் சொந்தமானச் சுண்ணாம்பு கல் சுரங்கத்தினால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாகக் கள ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்புமணி ராமதாஸ், வழக்கறிஞர் கே. பாலு மற்றும் பாமக நிர்வாகிகள் அந்தச் சுரங்கத்திற்குள் நுழைந்து ஆய்வு செய்ததோடு, அங்கேயே செய்தியாளர்களையும் சந்தித்தனர்.

இதையும் படிங்க: பயந்து போய் அலறுகிறார் பொம்மை முதல்வர்! ஸ்டாலினுக்கு இபிஎஸ் கடும் பதிலடி!

அனுமதியின்றிச் சுரங்கத்திற்குள் நுழைந்ததாக டால்மியா நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜா ரஞ்சித் சிங் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கயர்லாபாத் காவல்துறையினர் அன்புமணி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், அரியலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியும் அன்புமணி ராமதாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, அரியலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இதற்கிடையில், காவல்துறை தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசம் கோரப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் மேற்கொண்ட ஆய்விற்காகத் தொடரப்பட்ட இந்த வழக்கில், உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவு பாமக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: “அடிப்படை உறுப்பினரே இல்லை, பிறகு எப்படி தலைவர்?” அன்புமணிக்கு எதிராக கொதிக்கும் டாக்டர் ராமதாஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share