“இனி ரொம்ப கஷ்டம் தான்...” - இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி... தமிழகத்திற்கே பேராபத்து...!
காவிரியில் தண்ணீர் வராததும், போதிய மழை பெய்யாததும் காரணமாக டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட நெல் தட்டுப்பாடு காரணமாக அரிசி விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை, இந்த ஆண்டு இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் தேவையான நீர் கிடைக்காமல் டெல்டா பகுதியில் உள்ள விளைநிலங்கள் வறண்டு தரிசாகக் கிடக்கின்றன.
இதனால் ஏற்பட்ட நெல் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக அரிசி ஆலை உரிமையாளர்கள் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு நெல் வாங்கச் சென்றுள்ளனர். ஆனால் அங்கும் வறட்சி நிலவுவதால், யாரும் நெல் வழங்காத சூழல் ஏற்பட்டுள்ளது.
நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் அதிக விலை காரணமாக வாங்குவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதால், பொன்னி உள்ளிட்ட சன்னரக அரிசி விற்பனை சரிவை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க: 15 நாளில் இப்படியா..? அரிசி விலை உயர்வு... அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு.!
“விலை கேட்டுவிட்டு பலரும் திரும்பிச் செல்கிறார்கள். 'ஏன் இவ்வளவு விலை உயர்ந்துவிட்டது?' என்று கேட்கிறார்கள். பிறகு குறைந்த விலையிலான குருணை அரிசியைத்தான் வாங்கிச் செல்கிறார்கள். இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய காரணம் நெல் விளைச்சல் குறைந்ததுதான். கர்நாடகாவில் ஒரு போக சாகுபடிதான் நடக்கிறது. அங்கிருந்து நெல் வாங்கி அரிசி தயாரிப்பார்கள். அங்கும் வரத்து குறைந்திருப்பதால் விலை உயர்ந்துள்ளது” என்கின்றனர் விவசாயிகள்.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஜூன் மாதத்தில் நடைபெறும் குருவை சாகுபடியிலிருந்துதான் ரேஷன் அரிசிக்காக பெருமளவில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் நீர்த் தட்டுப்பாடு காரணமாக குருவை சாகுபடி பரப்பளவு பாதிக்கும் மேல் குறைந்துள்ளதால், நெல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணை திறக்கப்படாததை காரணமாகக் கொண்டு நெல் பதுக்கலும் அதிகரித்துள்ளதாகக் கூறும் ஆலை உரிமையாளர்கள், அரிசி விலை உயர்வுக்கு இதுவும் முக்கிய காரணம் என தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளதால், தங்களது தொழிலைப் பாதுகாக்க தாங்களும் அதிக விலை கொடுத்து நெல் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அரிசி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அந்த அரிசியை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டியிருப்பதால் நஷ்டம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும், அரசால் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டு கிடங்குகளில் தேங்கி, வீணாகிக் கொண்டிருக்கும் நெல்லை தனியார் ஆலைகளுக்கு டெண்டர் முறையில் வழங்கினால், அரிசி விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஆலை உரிமையாளர்கள் கூறுகையில், “இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரசு கொள்முதல் செய்த நெல் இன்னும் கிடங்குகளில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவை சேதமடைந்து யாருக்கும் பயனின்றி போகின்றன. அவற்றை எங்களைப் போன்ற தனியார் ஆலைகளுக்கு டெண்டர் முறையில் வழங்கினால், வெளிச்சந்தையில் நெல் தேவை குறையும். அல்லது விவசாயிகளை சன்னரக நெல் சாகுபடியை அதிகப்படுத்த ஊக்குவிக்க வேண்டும். குண்டு ரக நெல்லை மட்டுமே பயிரிடாமல், சன்னரக நெல்லையும் அதிகமாக பயிரிட வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு தொடர்ந்து அண்டை மாநிலங்களை நம்பியே இருக்க வேண்டிய நிலை ஏற்படும். சன்னரக அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டுமெனில், விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், சிறந்த நீர் மேலாண்மை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்”.
ஏற்கனவே குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போதிய நீர் கிடைக்காமல் சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டால், நெல் தட்டுப்பாடு மேலும் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீரின்றி தவிக்கும் விவசாயிகள் மட்டுமின்றி, அவர்களை நம்பி இயங்கும் அரிசி ஆலைகள் முதல் சன்னரக அரிசியை வாங்கும் பொதுமக்கள் வரை அனைவரும் இந்தப் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே, இந்த நிலைமையை உணர்ந்து தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: வெடிக்கும் போராட்டம்... நீட்டை ஒழிப்பதற்கான நேரம் இது..! ஸ்டாலின் திட்டவட்டம்.!