சபரிமலை தங்கத் தகடு மாயம்: சென்னையில் பங்கஜ் பண்டாரி வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நிறைவு!
கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத் தகடுகள் மாயமான விவகாரத்தில், சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை (ED) நடத்திய அதிரடிச் சோதனைகள் இன்று நிறைவடைந்தன.
சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறை மற்றும் கூரையில் பதிக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத் தகடுகள் மாயமானதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கேரளா போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். இந்த விவகாரத்தில் ‘பணமோசடி’ தொடர்பான கோணத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகளும் தனிப்படையமைத்துத் தீவிர புலனாய்வில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கின் முக்கியக் கண்ணியாகக் கருதப்படும் சென்னையைச் சேர்ந்த நகை வியாபாரிகள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் கடந்த இரண்டு நாட்களாகச் சோதனைகள் நடைபெற்றன.
இந்த வழக்கில் ஏற்கனவே கேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அம்பத்தூரைச் சேர்ந்த பங்கஜ் பண்டாரியின் நகை தயாரிக்கும் நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முதல் சோதனையிட்டனர். அதனைத் தொடர்ந்து, சென்னை வேப்பேரியில் உள்ள அவரது மகனின் இல்லம் மற்றும் கொண்டித்தோப்பு பகுதியில் உள்ள அவரது நகைக்கடை பணியாளர்களின் வீடுகள் எனப் பல இடங்களில் இந்தச் சோதனைகள் விரிவுபடுத்தப்பட்டன. இன்று மதியம் வரை நீடித்த இந்தச் சோதனையில், வங்கிக் கணக்கு விபரங்கள், சில டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் முக்கியப் பரிவர்த்தனை கோப்புகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சபரிமலை கோயிலுக்கு வழங்கப்பட்ட தங்கத் தகடுகளைத் தயாரித்ததில் முறைகேடு நடந்ததா அல்லது தங்கம் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பிடிபட்ட ஆவணங்களின் அடிப்படையில் பங்கஜ் பண்டாரியின் மகன் மற்றும் ஊழியர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பி விசாரிக்க அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடிச் சோதனையானது சபரிமலை பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, மாயமான தங்கம் எங்கே போனது என்ற மர்மம் விரைவில் துலங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பூதாகரமாகும் சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு..!! களமிறங்கிய ED ..!! பல இடங்களில் அதிரடி ரெய்டு..!!
இதையும் படிங்க: விண்ணை தொட்ட சரண கோஷம்! சுடர்விட்டு பிரகாசித்த மகரஜோதி; பரவசத்தில் அய்யப்ப பக்தர்கள்!