நாங்க செத்தா முதலமைச்சர் தான் காரணம்... கதறி துடிக்கும் தூய்மை பணியாளர்கள்!
நாங்கள் செத்தா முதலமைச்சர் தான் காரணம் என போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கதறினர்.
சென்னை மாநகராட்சியின் ராயபுரம் (மண்டலம் 5) மற்றும் திரு.வி.க. நகர் (மண்டலம் 6) பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் கடந்த ஜூலை 16 ஆம் தேதி முதல் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டன. இந்த தனியார்மயமாக்கல் முடிவு, தூய்மைப் பணியாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம், மற்றும் பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 1 முதல் சுமார் 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு காத்திருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் 13 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. இதற்கு அ.தி.மு.க., த.வெ.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும், திரைப்பட பிரபலங்களும் ஆதரவு தெரிவித்தனர். இந்தப் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம், அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவது ஏற்கத்தக்கதல்ல என்றும், போராட்டக்காரர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து, ஆகஸ்ட் 13 அன்று நள்ளிரவில், சுமார் 800 முதல் 900 தூய்மைப் பணியாளர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கையின்போது, சில பெண் பணியாளர்கள் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மேலும், கைது செய்யப்பட்டவர்கள் 12 மண்டபங்களில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.இந்த நிகழ்வுக்குப் பிறகு, தூய்மைப் பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டங்களைத் தொடங்கினர்.
இதையும் படிங்க: மீண்டும் ஓர் மெரினா புரட்சியா? தூய்மை பணியாளர்களை தேடித் தேடி கைது செய்யும் போலீஸ்…
செப்டம்பர் 8 அன்று, கொருக்குப்பேட்டையில் 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, நள்ளிரவு 1:30 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், ரிப்பன் மாளிகையின் பின்புறம் 13 தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். இந்தப் போராட்டம், உயர்நீதிமன்ற உத்தரவின்படி குறைந்தபட்ச ஊதிய நிர்ணயச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்டது. ஆனால், இந்தப் போராட்டத்திலும் காவல்துறை தலையிட்டு, 13 பணியாளர்களை கைது செய்தது. இந்த நிலையில், தூய்மை பணியாளர்கள் சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனர். இதன் காரணமாக தூய்மை பணியாளர்களை தேடி தேடிச் சென்று குண்டு கட்டாக கைது செய்து வருகின்றனர்.
தூய்மை பணியாளர்களை தேடி தேடிச் சென்று அவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். உழைப்பாளர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றனர். தூய்மை பணியாளர்களுக்கு ஒரு நியாயம்., எம்பி சசிகாந்த் செந்திலுக்கு ஒரு நியாயமா என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி போராடினார். அப்போது தங்கள் நியாயமான கோரிக்கைக்காக தானே போராடுகிறோம் என்றும் இப்படி எங்களை கஷ்டப்படுத்துகிறீர்களே எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கதறினர். நாங்க செத்தா முதலமைச்சர் தான் பொறுப்பு என்றும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: #BREAKING சென்னையில் மீண்டும் உண்ணாவிரதம்... தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது...!