×
 

திமுக ஒடுக்குமுறை மானக்கேடு முதல்வரே! இது பாசிச வெறியாட்டம்.. சீமான் கொந்தளிப்பு..!

தூய்மை பணியாளர்களை இரவோடு இரவாக கைது செய்து அடைத்து வைத்திருப்பது பாசிச வெறியாட்டம் என சீமான் கண்டனம் தெரிவித்தார்.

தங்களது வாழ்வாதார உரிமைகோரி, தனியார்மயத்துக்கு எதிராக சென்னை, ரிப்பன் மாளிகை வாசலில் 13 நாட்களாக அறவழியில் போராடி வந்த தூய்மைப்பணியாளர்களை இரவோடு இரவாகக் குண்டுகட்டாகக் கைதுசெய்து, கொடும் தாக்குதல் தொடுத்து, திமுக அரசு ஏவியிருக்கும் அடக்குமுறை அரசப்பயங்கரவாதத்தின் உச்சம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

விளிம்பு நிலை மக்களின் நியாயமானக் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, அவர்கள் மீது பாய்ச்சப்பட்டுள்ள ஒடுக்குமுறை கடும் கண்டனத்திற்குரியது என்றும் சமூக நீதி எனும் சொல்லாடலைத் தாங்கள்தான் பிரசவித்தது போல, மூச்சுக்கு முன்னூறு தடவை உச்சரிக்கும் முதல்வர் ஸ்டாலின் அடித்தட்டு உழைக்கும் மக்களின் மீது அதிகார வலிமைக் காட்டி, அடக்கி ஒடுக்குவதுதான் சமூக நீதியா என கேள்வி எழுப்பினார்.

வாயிலும், வயிற்றிலடித்துக் கொண்டு கதறியழும் எளிய மக்களின் கண்ணீரும், ஓலமும் உங்கள் கல்மனதைக் கரைக்க வில்லையா என்று கேட்டுள்ளார். ஓரணியில் தமிழ்நாடு என்றீர்களே, மொத்த தமிழ்நாடும் தூய்மைப்பணியாளர்கள் பக்கம் நிற்கிறது என்றும் நீங்கள் எந்த அணியில் நிற்கிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், உங்களுடன் ஸ்டாலின்’ என்றீர்களே எங்கள் உழைக்கும் மக்களோடு நிற்க மறுத்து, தனியார் முதலாளிக்கு எதற்கு வெண்சாமரம் வீசுகிறீர்கள் என்றும் சாடினார்.

இதையும் படிங்க: சீமானுடன் ஓயாத பஞ்சாயத்து! வருண் குமார் ஐபிஎஸ் திடீர் டிரான்ஸ்பர்...

சிங்காரச்சென்னை என இன்றைக்கு தம்பட்டம் அடித்துக் கொள்ளலாம்., ஆனால் அதனை உருவாக்க இரத்தத்தை வியர்வையாய் நாளும் சிந்தி, அரும்பாடு பட்டு உழைத்தது ஆதித்தொல்குடி மக்கள்தான் என்றும் கூறினார்.

 தமிழ்நாட்டில் தூய்மைப்பணியைத் தனியார்மயமாக்குவதற்காக இந்தளவுக்கு வரிந்துகட்டுவது ஏன் என்றும் இதுதான் உங்கள் திராவிட மாடல் ஆட்சியா என்றும் போராடும் தூய்மைப்பணியாளர்களை ஏறெடுத்தும் பாராத உங்களுக்குக் கம்யூனிசம், சோசலிசம் குறித்தெல்லாம் பேசுவதற்குக் கூச்சமாக இல்லையா எனவும் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார். இதெல்லாம் மானக்கேடு என்றும் ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல, மக்கள் அங்கே அல்லாடிக் கொண்டிருக்கும் வேளையில், திரைப்படம் பார்த்துப் பொழுதுபோக்குவது ஒரு முதல்வருக்கு அழகா என்றும் கேட்டுள்ளார். 

தூய்மைப்பணியாளர்களைக் கைதுசெய்து, 8 வெவ்வேறு இடங்களில் இரவோடு இரவாக அடைத்து வைத்து, அடித்துத் துன்புறுத்தியது எல்லாம் பாசிசத்தின் வெறியாட்டம் இல்லையா என்று விளாசிய சீமான், கைதுசெய்யப்பட்டு 10 மணி நேரத்தைக் கடந்தும் காவலில் வைத்திருப்பது சட்டத்துக்குப் புறம்பானது இல்லையா என்று கேட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களை எவ்வித வழக்குகளுமின்றி, உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும், அவர்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்று, பணி நிலைப்பையும், வாழ்வாதாரத்தையும் உறுதிசெய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: செத்து சாம்பல் ஆனாலும் தனிச்சு தான் போட்டி! யாரும் அசைக்க முடியாது... சீமான் திட்டவட்டம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share