முதல்வருக்கு ஒரு நீதி, சீமானுக்கு ஒரு நீதியா? காவல்துறையை வெளுத்து வாங்கிய மதுரை உயர் நீதிமன்றம்!
சீமான் குறித்து அவதூறு பரப்பிய யூடியூபர்கள் மீது இன்று மாலைக்குள் வழக்குப்பதிவு செய்து நாளை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் குறித்துப் பேசினால் உடனடியாகக் கைது நடவடிக்கை எடுக்கும் தமிழகக் காவல்துறை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து அவதூறு பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, காவல்துறையின் ஒருதலைப்பட்சமான செயல்பாட்டிற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து 'வலைப்பேச்சு' மீடியாவைச் சேர்ந்த பிஸ்மி மற்றும் 'தமிழன் கோகுல்' ஆகிய யூடியூபர்கள் மிகவும் தரக்குறைவாகவும், ஆதாரமற்ற முறையிலும் தொடர்ந்து அவதூறான கருத்துகளைப் பதிவிட்டு வருவதாகவும், அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தீரன் திருமுருகன் மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கடந்த ஜூலை 3-ஆம் தேதி உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி விக்டோரியா கெளரி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி விக்டோரியா கெளரி, திமுக எம்.எல்.ஏ முதலமைச்சர் குறித்துப் பேசினார் என்பதற்காக உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது செய்கிறீர்கள். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நில விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் குறித்து யூடியூபில் பேசிய நபரை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்கிறீர்கள். ஆனால், சீமான் விவகாரத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? தமிழகக் காவல்துறை பாரபட்சமாகச் செயல்படுகிறதா? என அதிரடியாகக் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு பணி வழங்குவது அரசின் கொள்கை முடிவு!
மேலும் தனது கருத்துகளைப் பதிவு செய்த நீதிபதி, தேர்தலில் வெற்றியோ தோல்வியோ, சீமான் தற்போதைக்குத் தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒரு தலைவராகவே உள்ளார். ஒரு தலைவர் குறித்து அவதூறாகவும் கொச்சையாகவும் பேசுவதை வேடிக்கை பார்க்க முடியாது எனக் குறிப்பிட்டதோடு, யூடியூபர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் ஆகியோர் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று மாலைக்குள் வழக்குப் பதிவு செய்து, அவதூறு வீடியோக்களை உடனடியாக நீக்கி நாளை (ஜூலை 29) நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: ஒரே ஒரு இன்ஸ்பெக்டர் மட்டும் 16 பேரையும் சுட்டாரா? ஸ்டெர்லைட் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி கேள்வி!