அம்பேத்கர் சிலை திறப்பு சிக்கல்..! இதைக் கூடவா செய்ய முடியல..? தவெகவை பந்தாடிய சீமான்..!!
அம்பேத்கர் சிலை திறப்பு சிக்கலை சுட்டிக்காட்டி சீமான் முக்கிய வலியுறுத்தலை முன்வைத்தார்.
சேலம், ஒதியத்தூரில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் திறப்பதற்கு எழுந்திருக்கும் சிக்கலைக்கூட தீர்க்க இயலாது, திராணியற்றுப் போய்விட்டதா தவெக அரசு என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். சேலம் மாவட்டம், கெங்கவல்லிக்கு அருகேயிருக்கும் ஒதியத்தூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலையைத் திறப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே எழுந்திருக்கும் பதற்றச்சூழலும், மோதல்போக்கும் வேதனை அளிக்கிறது என்றார்.
அண்ணல் அம்பேத்கர் கால் மேல் கால் போட்டு இருப்பதாய் வடிவமைக்கப்பட்டு இருப்பதாலேயே அச்சிலையைத் திறக்க எதிர்ப்புத் தெரிவிப்பது அறிவிலித்தனத்தின் உச்சம் என்று கூறியுள்ளார்.
அண்ணல் அம்பேத்கர் ஒரு சாதிக்கானவர் இல்லை., ஒட்டுமொத்தச் சமூகத்துக்குமானவர். அறிவாசான் அம்பேத்கர் உலகம் பார்த்து வியந்த மாபெரும் கல்வியாளர்., சமூக விடுதலைக்காகப் பாடுபட்ட ஒப்பற்றப் புரட்சியாளர். அவரை ஒடுக்குமுறைக்கு எதிரானப் பொதுக்குறியீடாகவும், அறிவுலக மாமேதைகளில் உச்சம் தொட்டப் பேராசானாகவுமே பார்க்க வேண்டும் என்று சீமான் கூறினார்.
இதையும் படிங்க: வந்தே மாதரத்தை எதிர்க்காதது ஏன்.? அத்துமீறும் மத்திய அரசு... அமைதி காக்கும் தவெக.. சீமான் காட்டம்..!!
2021ஆம் ஆண்டு ஓதியத்தூர் பகுதியில் அமைக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலை 5 ஆண்டுகளாகத் திறக்கப்படாது கிடப்பில் போடப்பட்டது வெட்கக்கேடானது என தெரிவித்துள்ள சீமான், சமூக நீதியென்று வாய்கிழியப் பேசும் திமுகவின் ஆட்சியில் அம்பேத்கரின் சிலையைத் திறக்கக்கூட வழிசெய்யாது வாக்கரசியலுக்காக சமரசம் செய்துகொண்டது மோசடித்தனம் என்றார். எனவே ஒதியத்தூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் திறக்க வேண்டுமெனவும், தேவையற்ற சமூகப்பதற்றமும், மோதலும் ஏற்படுவதை முற்றாகத் தடுத்து, ஓர்மையும், நல்லிணக்கமும் நிலவுவதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் சீமான் வலியுறுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: மதுக்கடைக்கு எதிராக போராடிய மாணவிகள்..! கண்மூடித்தனமாக தாக்குதல்... கொந்தளித்த சீமான்..!!