தமிழகத்தில் டிரைவர்களுக்கு தட்டுப்பாடு! வடகிழக்கு இளைஞர்களை அதிக அளவில் களமிறக்க திட்டம்!
வடகிழக்கு மாநிலங்களில் இருந்து, ஓட்டுநர்களை தேர்வு செய்ய, பஸ், லாரி உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் பஸ், லாரி, கார் உள்ளிட்ட அதிக பயன்பாட்டில் உள்ள வாகனங்களை இயக்குவதற்கு 30 முதல் 40 சதவீதம் வரை ஓட்டுநர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை காரணமாக வாகன உரிமையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 3.80 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் இருசக்கர வாகனங்கள் மட்டும் 3.20 கோடியாக உள்ளன. வாடகை கார், வேன் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் 10 லட்சத்துக்கும் மேல் இயக்கப்படுகின்றன.
அரசு பஸ் ஓட்டுநர்கள் உட்பட மொத்தம் 19.12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஓட்டுநர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி என்னை கட்டிப்பிடித்து அன்பு காட்டினார்!! மேற்குவங்க படகோட்டி பெருமிதம்!
சென்னை சுற்றுலா வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் அன்பழகன் மற்றும் பொதுச் செயலர் சுகுமார் ஆகியோர் கூறுகையில், “வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. ஆனால் ஓட்டுநர்கள் பற்றாக்குறை 30 முதல் 40 சதவீதம் வரை உள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் வாடகை கார், வேன் இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது” என்றனர்.
மத்திய அரசு 12 பேர் வரை செல்லும் வாகனங்களுக்கு தனியான ‘பேட்ஜ்’ உரிமம் தேவையில்லை என்று பல ஆண்டுகளுக்கு முன்பே உத்தரவிட்டுள்ளது. பல மாநிலங்கள் இதை அமல்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் இன்னும் இந்த விலக்கு அமலுக்கு வரவில்லை. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தினால் ஓட்டுநர் பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்க முடியும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளன செயலர் தர்மராஜ் கூறுகையில், “தமிழகம் முழுவதும் 4,700 தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் போதிய ஓட்டுநர்கள் இல்லை. ஓட்டுநர் தொழிலுக்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. சம்பளம் குறைவு உள்ளிட்ட காரணங்களால் வேறு தொழில்களுக்கு செல்கின்றனர். எனவே தமிழக அரசு ஓட்டுநர்களுக்கு தனி அங்கீகாரம் அளிக்க வேண்டும். இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.
ஓட்டுநர்கள் கிடைக்காததால், பஸ் உரிமையாளர்கள் வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயிற்சி பெற்ற ஓட்டுநர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஏற்கெனவே தொடங்கியுள்ளன.
இதையும் படிங்க: உஷாரா இருங்க..! வாக்கு எண்ணிக்கை வரைக்கும் கவனமா செயல்படனும்..! இபிஎஸ் அறிவுறுத்தல்..!