பட்டியலினத்தவர்களை காலில் விழ வைத்த விவகாரம்... மதுரை ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளருக்கு பறந்த நோட்டீஸ்...!
ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் நோட்டிஸ் வழங்கி உள்ளது..
ஈரோடு அருகே, பொது மயானத்தை, பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்த சம்பவத்தில், போலீசார் முன்னிலையில் பட்டியலினத்தவர் ஆதிக்க சமூகத்தினர் காலில் விழுந்தது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் நோட்டிஸ் வழங்கி உள்ளது.
பெருந்துறை தாலுகாவிற்கு உட்பட்ட பெரும்பாளி கிராமத்தில் 100.க்கும் மேற்பட்ட பட்டியலினத்தவர்கள் வசிக்கும் நிலையில், அதே ஊரில் உள்ள பொது மயானத்தை பயன்படுத்த மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் 5 கிமீ தொலைவில் உள்ள திங்களூரில் இந்த மக்கள் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இது தொடர்பான பிரச்சனையில் சமீபத்தில் மயானத்தை அளவீடு செய்த வட்டாச்சியர் இது அனைவருக்குமான பொது மயானம் என அறிவிப்பு செய்தார்.
இதையும் படிங்க: மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கு... ஒரே போடாய் போட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...!
இந்நிலையில், இதே ஊரை சேர்ந்த BSP நிர்வாகி காளியப்பன் என்பவரின் தந்தை சென்னி (80) வயது மூப்பால் கடந்த திங்களன்று உயிரிழந்தார். அவரது சடலத்தை பெரும்பாளி பொது மயானத்தில் அடக்கம் செய்ய சென்ற போது, மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது காவல் ஆய்வாளர், வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இனிமேல் எந்த வேலைக்கும் எங்களிடம் வரக்கூடாது என மாற்று சமூகத்தினர் மிரட்டியதால் கை கூப்பி நின்ற பட்டியலின மக்கள், போலீசார் முன்னிலையில் அவர்களின் காலில் விழுந்தனர். அதன் பின் முதல் முறையாக அந்த கிராமத்தின் பொது மயானத்தில் பட்டியலினத்தவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியான நிலையில், இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பொது மயானத்தில் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய காவல் துறை அதிகாரிகள் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. இச்செயல்கள் மனித உரிமை மீறல் என்றும் இச்செயல் அரசியலமைப்பு சட்டம் பிரிவு (21) மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்கள் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
சடலத்தை அடக்கம் செய்வதை தடுத்தது சட்டத்திற்கு புறம்பான செயல், எனவே, இச்சம்பவத்தில் ஈடுபட்ட பிற சமூகத்தினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து இம்மாதம் 30.ம் தேதிக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவத்தின் போது எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காத வருவாய் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கவும் SC,ST ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: சோழவந்தானில் அடுத்தடுத்து அரங்கேறும் அதிர்ச்சி... மரண பயத்தில் மதுரை மக்கள்... சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு...!