போதைப்பொருள் கும்பலை காட்டிக்கொடுத்த மாணவனுக்கு இப்படியொரு நிலையா?... பெற்றோர் பகீர் குற்றச்சாட்டு...!
போதைப்பொருள் கும்பல் குறித்து தகவல் கொடுத்ததால் மாணவர் படுகொலை? – கல்லூரி நிர்வாகம் மீது தந்தை பகிரங்கக் குற்றச்சாட்டு.
கல்லூரி வளாகத்தில் போதைப்பொருள் புழக்கம் குறித்து நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்ததால், தனது மகன் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக உயிரிழந்த மாணவனின் தந்தை கென்னடி கண்ணீருடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், வடக்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கென்னடி. இவரது மகன் கே. அமுதன், கோவையில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு விடுதியில் தங்கியிருந்த அமுதன், தனது நண்பர் அஜீஸ் என்பவருடன் இரவு நேரத்தில் விடுதியின் கீழ்த்தளத்துக்குச் சென்றுள்ளார். அங்கு சமையல் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில ஊழியர்களுக்கும், மாணவர் அஜீஸுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது.
இதையடுத்து, மறுநாள் சமையல் ஊழியர்கள் பணிநிறுத்தம் செய்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக கல்லூரி டீன், துறைத் தலைவர் மற்றும் முதல்வர் ஆகியோர் மாணவனின் பெற்றோரை வரவழைத்து விசாரணை நடத்தி, விடுதியை விட்டு காலி செய்யுமாறு கூறியுள்ளனர். ஆனால், தான் அந்த மோதலில் ஈடுபடவில்லை என அமுதன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் வேண்டும்! கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் பேட்டி!
தொடர்ந்து, கல்லூரி வளாகம் மற்றும் விடுதியில் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்களின் பெயர்களை எழுதிக் கொடுத்தால், மீண்டும் விடுதியில் அனுமதிக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அமுதனிடம் கல்லூரி நிர்வாகத்தினர் வாக்குமூலம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை ரகசியமாக வைப்பதாக கல்லூரி நிர்வாகம் அளித்த வாக்குறுதியை நம்பி, அமுடனும் சில பெயர்களை எழுதிக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், இன்டர்னல் தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு வந்த அமுதன், போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் குறித்து நிர்வாகத்திடம் காட்டிக்கொடுத்த விஷயம் பிற மாணவர்களுக்குத் தெரியவந்துள்ளது. நேற்று அமுதன் தனது நண்பர் ஸ்ரீமனுடன் வெளியில் வந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த 20-க்கும் மேற்பட்ட நபர்கள் அவர்களைச் சூழ்ந்துள்ளனர். உடன் வந்த ஸ்ரீமன் தப்பி ஓடிய நிலையில், அமுதனைப் பிடித்துச் சென்ற அக்கும்பல், மைதானத்தில் வைத்து இரும்பு தடி மற்றும் கத்தியால் கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்ததாக தந்தை கென்னடி குற்றம்சாட்டியுள்ளார்.
இச்சம்பவத்தை மறைந்திருந்து பார்த்த நண்பர் ஸ்ரீமன் சாட்சியக் கூற முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பெற்றோர் கூறும் போது, என் மகனை 20 பேர் கொண்ட கும்பல் பைக்ல வந்து தூக்கிட்டு போயிட்டு, கிரவுண்டுல வச்சு இரும்பு ராடாலையும் கத்தியாலையும் கொடூரமாக தாக்கியிருக்காங்க. இச்சம்பவத்தை மறைந்திருந்து பார்த்த சக மாணவர் ஒருவர் தற்போது வாக்குமூலம் அளித்துள்ளார். 12 மணி வரை என்னிடம் பேசிய என் மகனை, அதற்குப் பிறகு தாக்கி, ரூமிற்கு கொண்டு வந்து போட்டு, பின்னர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும் தொடர்ந்த அவர், கல்லூரியின் டீன், துறைத் தலைவர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் என் மகனை தீவிர மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்கள். தேர் நடக்கும் நேரத்திலேயே உடனடியாக ஹாஸ்டலை விட்டு வெளியேற வேண்டும் என கெடுபிடி விதித்ததால், கடந்த 3 நாட்களாக தங்குவதற்கு அறை தேடி அலலைந்து, நண்பனின் அறையில் தங்கியிருந்தான். கல்லூரிக்கு வந்தபோதுதான் இந்த தாக்குதல் நடந்துள்ளது. சம்பவம் நடந்து இதுவரை கல்லூரி நிர்வாகத்திலிருந்து பிரின்சிபலோ ஆசிரியர்களோ எங்களை வந்து பார்க்கவில்லை என்றார்.
மாணவனின் தாய் கூறும் போது : என் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக எங்களுக்கு தவறான தகவல் சொன்னார்கள். ஆனால் என் மகன் எந்தத் தப்பும் செய்யவில்லை. இந்த கல்லூரியில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது. என் மகனுக்கு நேர்ந்த நிலைமை இனி எந்தவொரு மாணவருக்கும் ஏற்படக்கூடாது. கல்லூரி நிர்வாகத்தின் மீதும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இச்சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 150 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி! 'வெற்றி 150' திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கி அமைச்சர் ஆனந்த் அறிவிப்பு!