நிலப் பிரச்சனையால் நேர்ந்த சோகம்..! ஆசையாய் வளர்த்த மாமரத்திலேயே தூக்கிட்டு மரணித்த முதிய தம்பதி..!!
புதுக்கோட்டையில் நிலப்பிரச்சனையில் முதிய தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருவுடையார்பட்டியில் வாங்கிய கடனை அடைக்க இளைய மகனுக்கு தெரியாமல் இடத்தை விற்பனை செய்ததால் ஏற்பட்ட பிரச்சனையில் முதிர்ந்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருவுடையார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (70) விவசாயி. இவரது மனைவி லட்சுமி (65). இவர்களுக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகன்களும் உள்ளனர். இரண்டு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்த நிலையில் மூத்த மகனுக்கும் திருமணம் செய்து அவர் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இவர்களது இளைய மகன் முருகேசனுக்கும் திருமணமான நிலையில் அவர் திருவுடையார்பட்டியில் வசித்து வருகிறார். மேலும் முருகேசன் விவசாய வேலையும் ஜேசிபி இயந்திரம் இயக்கும் வேலையும் செய்து வருகிறார். இந்நிலையில் தான் பெற்றோரான கருப்பையா, லட்சுமி தம்பதியினர் இரண்டு மகன்களுக்கும் அவர்களது சக்தியை மீறி கடன் வாங்கி ஒரே இடத்தில் இரண்டு வீடுகளை கட்டியுள்ளனர். இளைய மகன் முருகேசனுக்கு வீடு முழுமையாக கட்டிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. மூத்த மகனுக்காக அவர்கள் வீடு கட்டி வரக்கூடிய நிலையில் மேலும் கடன் வாங்கி அந்த வீட்டை கட்ட முடியாததால் கட்டி முடிக்காத வீட்டிலேயே அவர்கள் வசித்து வந்தனர்.
இந்நிலையில் தான் முழுமையாக கட்டி முடித்த வீட்டில் இவர்களது இளைய மகன் முருகேசன் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இளைய மகன் முருகேசனுக்கும் பெற்றோருக்கும் பேச்சு வார்த்தை இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வயது முதிர்ந்த இந்த தம்பதியினர் அவர்கள் வாங்கிய கடனை கட்டுவதற்காக அவர்களது வீட்டிற்கு அருகாமையில் உள்ள இவர்களுக்கு சொந்தமான ஒரு இடத்தை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இளைய மகன் முருகேசனுக்கு தெரியாமல் விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் துணிகரம்... 137 சவரன் நகைக் கொள்ளை...!! நடந்தது என்ன?
இந்நிலையில் தான் பெற்றோர் தனக்குத் தெரியாமல் இடத்தை விற்பனை செய்தது அவர்களது இளைய மகன் முருகேசனுக்கு தெரிய வந்ததை தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பெற்றோருடன் முருகேசன் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்துள்ளார். இதனால் வயது முதிர்ந்த பெற்றோர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் வங்கிக்கு சென்று வருவதாக கூறி சென்ற அந்த வயது முதிர்ந்த தம்பதியினர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மாடு கட்ட கூடிய புதுக்கயிறு இரண்டை வாங்கி வந்துள்ளனர். பின்னர், ஆசை ஆசையாக வளர்க்கப்பட்ட மாமரத்தில் இரண்டு கிளைகளில் தனித்தனியாக கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அப்பகுதியினர் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வல்லத்திராக்கோட்டை காவல்துறையினர் சடலங்களை விட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நீதித்துறை சீர்திருத்தம் அம்பேல்!! பொதுவாக்கெடுப்பில் தோல்வி!! இத்தாலி பிரதமர் மெலோனிக்கு சறுக்கல்!