“முதலமைச்சரின் பேச்சில் பதற்றம்; சூரியன் ஏற்கெனவே மறைந்துவிட்டது!” - தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி முழக்கம்!
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தினத் தேநீர் விருந்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அண்மைக்கால உரைகள் மற்றும் விமர்சனங்களுக்குக் கடுமையான பதிலடி கொடுத்தார்
செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், சமீபகாலமாக முதலமைச்சரின் பேச்சில் மிகுந்த பதற்றம் தெரிகிறது; அவர் கீழ்த்தரமாகப் பேசி வருகிறார் என்று குற்றம் சாட்டினார். தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது வெற்றிப் பாதையில் செல்வதைக் கண்டு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பதற்றமடைவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், முதலில் நீங்கள் மற்ற தலைவர்களுக்கு மரியாதை கொடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தினார்.
பிரதமர் வரும்போது சூரியன் மறையும் என்ற திமுகவின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், “பிரதமர் வரும்போதுதான் சூரியன் மறைய வேண்டும் என்ற அவசியம் இல்லை, முதலமைச்சர் பேசும்போதே சூரியன் மறைந்துவிடுகிறது” என எள்ளி நகையாடினார். தற்போது தமிழ்நாடு ஒரு போராட்டக் களமாக மாறியுள்ளதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
கூட்டணி குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த தமிழிசை, ஜனநாயக ரீதியாக எல்லாரும் இணையாகப் பிரதமருடன் வந்து பேசி, இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்; இதில் எங்கு அடிமைத்தனம் இருக்கிறது? எனக் கேள்வி எழுப்பினார். மாறாக, காங்கிரஸ் கட்சிதான் உங்களுக்கு அடிமையாக இருக்கிறது, இல்லையென்றால் நீங்கள் தான் காங்கிரஸ் கட்சிக்கு அடிமையாக இருக்கிறீர்கள் எனத் திருப்பித் தாக்கினார். தமிழக மக்கள் வருங்காலத்தில் எப்படியெல்லாம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பது குறித்துப் பேசுவதை விட்டுவிட்டு, தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பதாக அவர் சாடினார்.
இதையும் படிங்க: குடும்பப் பள்ளிகளில் இந்தி, அரசுப் பள்ளிகளில் எதிர்ப்பு! திமுகவை விளாசிய தமிழிசை சௌந்தரராஜன்!
இதையும் படிங்க: "தமிழே எமது மூச்சு" - மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் சங்கமம்!