2026 வேளாண் பட்ஜெட் நிறைவு! 130 நிமிடங்கள் உரையை வாசித்தார் அமைச்சர் வினோத்! சட்டசபை ஒத்திவைப்பு!
இன்று காலை 9.30 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசத் தொடங்கிய அமைச்சர் வினோத், கிட்டத்தட்ட 130 நிமிடங்கள் உரையாற்றினர்.
2026–27ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத், சுமார் 130 நிமிடங்கள் நீண்ட உரையில் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கவும், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகள் மாநிலம் முழுவதும் விவசாயிகள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளன.
பட்ஜெட்டில் முக்கியமாக, அதிக மகசூல் பெறும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் பெயரில் புதிய வேளாண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல், உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் ஐந்து விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு மண்வளம் பாதுகாப்பு இயக்கம் புதிதாக அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டையில் நம்மாழ்வார் பெயரில் உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்பு கல்லூரி அமைக்க ரூ.15 கோடி மாநில நிதி ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதையும் படிங்க: ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.56.72 கோடி... 100% மானியத்துடன் புதிய வேளாண் திட்டம் அறிவிப்பு!
விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வரும் இலவச மின்சாரத் திட்டத்திற்காக இந்த ஆண்டு ரூ.7,432 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதும் பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக அமைந்தது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.
இல்லத்தரசிகளை வீட்டிலேயே காய்கறி மற்றும் பழவகைகளை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கும் வகையில் "வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்" திட்டத்திற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மாடித்தோட்டம் அமைக்க தேவையான இடுபொருள் தொகுப்புகள், காய்கறி விதைகள், பழச்செடிகள், நீரியல் தோட்டம், செங்குத்துத் தோட்டம் மற்றும் நிழல்வலைக் குடில்கள் அமைக்க அரசு உதவி வழங்க உள்ளது.
காலை 9.30 மணிக்கு உரையைத் தொடங்கிய அமைச்சர் வினோத், தொடர்ந்து சுமார் 130 நிமிடங்கள் பட்ஜெட்டை வாசித்தார். இதற்கு முந்தைய நாளில் 2026–27ஆம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் சுமார் 150 நிமிடங்கள் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வேளாண் உற்பத்தி அதிகரிப்பு, இயற்கை வேளாண்மை, விவசாயிகளின் வருமான உயர்வு மற்றும் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சூப்பர் எல் நினோ எச்சரிக்கை! தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு ஆபத்து? வேளாண் பட்ஜெட்டில் அதிர்ச்சி தகவல்!