×
 

மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு 2 புதிய உறுப்பினர்கள்! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஓய்வுபெற்ற நீதிபதி மஞ்சுளா மற்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுகந்தி ஆகியோரை உறுப்பினர்களாக அரசு நியமித்துள்ளது.

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் காலியாக இருந்த இரண்டு உறுப்பினர் பணியிடங்களுக்கு, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டாக்டர் ஆர்.என். மஞ்சுளா மற்றும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏ. சுகந்தி ஆகியோரை நியமித்துத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் பணியிடங்கள் காலியாக இருந்து வந்த நிலையில், புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதையடுத்து, மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993, பிரிவு 22(1)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், தமிழக ஆளுநரின் ஒப்புதலுடன் பொதுத்துறை (மனித உரிமைகள்) செயலாளர் ஈ. சுந்தரவல்லி இதற்கான அரசாணையைப் (G.O. Ms No.549) பிறப்பித்துள்ளார்.

இப்புதிய அரசாணையின்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற மாண்பமை நீதிபதி டாக்டர் ஆர்.என். மஞ்சுளா மற்றும் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.) அதிகாரி ஏ. சுகந்தி ஆகியோர் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களாக முறைப்படி நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தங்களது பொறுப்புகளை ஏற்கும் நாளிலிருந்து 3 ஆண்டுகள் அல்லது தங்களுக்கு 70 வயது பூர்த்தியாகும் வரை, இதில் எது முன்னதாக வருகிறதோ அதுவரை இப்பதவியில் நீடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு..! உஷார் மக்களே.! சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

நீதித்துறை மற்றும் அரசு நிர்வாகத்தில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட இவ்விரு உயர் அதிகாரிகளின் நியமனம், தமிழ்நாட்டில் மனித உரிமை மீறல் தொடர்பான புகார்களை விரைந்து விசாரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி வழங்குவதற்குப் பெரும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களின் நியமனம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழ்நாடு அரசின் சிறப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழர்கள் சுட்டுக்கொலை..! கர்நாடக வனத்துறை நிகழ்த்திய கொடூரம்... பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share