மின் கட்டணம் அதிகமாக வந்தால் பயப்பட வேண்டாம்? மின்வாரியத்தின் புதிய அதிரடி நடைமுறை!
முந்தைய பில் தொகையை விட புதிய கட்டணம் 20 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்திருந்தால், அந்த இணைப்புக்கான கட்டண வசூல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
சென்னை: வீடுகளுக்கான மின் கட்டணத்தில் அதிகப்படியான மாறுபாடு மற்றும் தவறான பில்லிங் குறித்த புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், மின் கட்டணத்தை கணக்கிடும் முறையில் புதிய கண்காணிப்பு நடைமுறைகளை மின்சார வாரியம் கொண்டு வந்துள்ளது. இதனால் இனி அதிகமாக மின் கட்டணம் வந்தால், சம்பந்தப்பட்ட வீடுகளில் மறு ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக பல்வேறு பகுதிகளில் மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வந்ததாக நுகர்வோர் புகார் தெரிவித்தனர். மின் பயன்பாட்டை கணக்கிடுவதில் ஏற்பட்டதாக கூறப்படும் குறைபாடுகள் குறித்தும் கேள்விகள் எழுந்தன. இதையடுத்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், வீட்டு மின் நுகர்வோருக்கான பில்லிங் முறையில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகப்படியான மின் பயன்பாடு மற்றும் பில் தொடர்பான புகார்களை குறைக்கும் வகையில் LT பில்லிங் மென்பொருளில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மின்சார நுகர்வோருக்கு ஷாக் கொடுக்கும் 65,921 காலியிடங்கள்? ஆள் இல்லாமல் ஆட்டம் காணும் மின் வாரியம்!
இதன்படி, ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களில் சேர்த்து 500 யூனிட்டுக்கும் அதிகமாக மின்சாரம் பயன்படுத்திய வீட்டு இணைப்புகள் கண்காணிப்பு பட்டியலில் இடம்பெறும். இதுபோன்ற இணைப்புகளுக்கு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வழங்கப்படும் மின் கட்டணம், அதற்கு முந்தைய பில் தொகையுடன் ஒப்பிட்டு கண்காணிக்கப்படும்.
முந்தைய பில் தொகையை விட புதிய கட்டணம் 20 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்திருந்தால், அந்த இணைப்புக்கான கட்டண வசூல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். பின்னர் சம்பந்தப்பட்ட வீட்டில் மின்வாரிய அதிகாரிகள் நேரில் சென்று மின் பயன்பாடு மற்றும் மீட்டர் உள்ளிட்ட விவரங்களை மறு ஆய்வு செய்வார்கள்.
மேலும், மீட்டர் ரீடிங் எடுக்கப்பட்ட நாளில் இருந்து 3 வேலை நாட்களுக்குள் இந்த கள ஆய்வை முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையின் மூலம் தவறான பில்லிங் தொடர்பான புகார்களை குறைத்து, நுகர்வோருக்கு சரியான மின் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் அதிக கட்டணம் குறித்த கவலை கொண்டுள்ள வீட்டு நுகர்வோர் மத்தியில் இந்த அறிவிப்பு கவனத்தை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: மின்துறை தனியார்மயத்தை கைவிடுக! திருப்பூரில் மின் ஊழியர் மத்திய அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்!