4,000 போலீசாருக்கு உதவிய திட்டம் திடீர் முடக்கம்! நிதி இல்லாமல் தவிக்கும் ‘மகிழ்ச்சி’
2025-26-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மண்டல மாவட்டங்களுக்கும் திட்டத்தை விரிவுபடுத்துவதாக அரசு அறிவித்தது.
சென்னை: பணிச்சுமை, மன அழுத்தம், குடும்பப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் போலீசாருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் உதவும் வகையில் தொடங்கப்பட்ட ‘மகிழ்ச்சி’ திட்டம், போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் செயல்படாமல் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசாரின் மனநலத்தை பாதுகாக்கும் முக்கியமான திட்டமே தற்போது நிதி பற்றாக்குறையால் சிக்கலில் இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் சார்பில், போலீசாருக்கான ‘மகிழ்ச்சி’ திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் சென்னையில் தொடங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. போலீசாருக்கு மனநல ஆலோசனை வழங்குவது மட்டுமின்றி, குடும்பப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் இருந்து அவர்களை மீட்பதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.
2025-26-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மண்டல மாவட்டங்களுக்கும் திட்டத்தை விரிவுபடுத்துவதாக அரசு அறிவித்தது.
இதையும் படிங்க: ஒடிசா பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! சூட்கேஸில் உடல் பாகங்கள்! கூடுவாஞ்சேரி கொலையில் திடுக் திருப்பம்!
இதற்காக மேற்கு மண்டலத்துக்கு ரூ.30.75 லட்சம் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், அந்த நிதி முழுமையாக இதுவரை விடுவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், 2026-27-ம் ஆண்டுக்கான புதிய அரசாணையும் வெளியாகாததால் திட்டத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
போலீசார் தொடர்ந்து அதிக அழுத்தம் நிறைந்த பணிச்சூழலில் பணியாற்றுவதால், சிலர் மது, ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட பழக்கங்களுக்கு ஆளாவதாகவும், பொருளாதார மற்றும் குடும்ப பிரச்னைகளை எதிர்கொள்வதாகவும் கூறப்படுகிறது. காவல்துறை புள்ளிவிபரங்களின்படி ஆண்டுதோறும் சராசரியாக 40 போலீசார் தற்கொலை செய்து கொள்வதாகவும், நடப்பாண்டில் இதுவரை 18 பேர் தற்கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு மண்டலத்தில் மட்டும் 2,816 போலீசாருக்கு மனநல ஆலோசனை தேவைப்படுவதாக ஆய்வு அடிப்படையில் அரசுக்கு ஏற்கனவே அறிக்கை அளிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுவரை ‘மகிழ்ச்சி’ திட்டத்தின் மூலம் சுமார் 4,000 போலீசார் பயனடைந்துள்ளனர். எனவே, திட்டத்துக்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கி மீண்டும் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: தமிழக போலீசாருக்கு வார விடுமுறை சிக்கல்: 10 ஆயிரத்தை கடந்த காலியிடங்கள்... அடுத்த ஆண்டுக்கும் ஆட்கள் தேர்வு இல்லை!