×
 

கொளுத்தப்போகுது வெயிலு! குடையை மறந்துடாதீங்க!! தமிழகத்திற்கு வெப்ப அலைக்கான ஆரஞ்ச் அலர்ட்! உஷார்!

தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில், இன்றும், நாளையும், வெப்ப அலை வீசக்கூடும் என்பதால், அதிக வெப்பத்திற்கான, 'ஆரஞ்சு அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று மற்றும் நாளை மாநிலத்தின் உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையற்ற வெளிப்புற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் வறண்ட வானிலை நீடித்து வருகிறது. நேற்று பல இடங்களில் வெப்பநிலை கணிசமாக உயர்ந்தது. குறிப்பாக, மதுரையில் 42.5 டிகிரி செல்சியஸ், அதாவது 108.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி, நாட்டிலேயே அதிக வெப்பமான இடமாக மாறியது. கடந்த 26 ஆண்டுகளில் மதுரையில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக இது குறிப்பிடப்படுகிறது.

மதுரையைத் தொடர்ந்து திருத்தணி, வேலூர், பாளையங்கோட்டை, திருச்சி, தூத்துக்குடி, ஈரோடு, கடலூர், கரூர் பரமத்தி, நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளிலும் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது. இதனால் பல இடங்களில் மக்கள் கடும் வெப்பத்தால் அவதிப்பட்டனர்.

இதையும் படிங்க: ஹை அலர்ட்! சென்னை, மதுரைக்கு வெப்பஅலை ஆபத்து!? ஆக்ஸ்போர்டு பல்கலை ஆய்வில் பகீர்!

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, இன்று மற்றும் நாளையும் வெப்ப அலை தாக்கம் தொடரும். வெப்பத்துடன் காற்றில் ஈரப்பதமும் அதிகரிக்க இருப்பதால், புழுக்கமான மற்றும் அசவுகரியமான வானிலை நிலவக்கூடும். இதன் காரணமாக முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், தாகம் இல்லாவிட்டாலும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மோர், இளநீர், எலுமிச்சை சாறு, லஸ்ஸி மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசல் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பானங்களை அருந்தி உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். வெயிலின் நேரடி தாக்கத்தை குறைக்க குடை, தொப்பி அல்லது இலகுரக பருத்தி ஆடைகளை பயன்படுத்துவது அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு! வளிமண்டல சுழற்சியால் மிரட்டும் வானிலை! உஷார்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share