"டாஸ்மாக் முறைகேடு வழக்கு" - ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் கார்த்திக், ரமேஷ் மீண்டும் கைது!
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் கார்த்திக், ரமேஷ் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்துள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற பலநூறு கோடி ரூபாய் நிதி முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவரது முக்கியக் கூட்டாளிகளான கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) போலிசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு அளித்த தகவல்களின் அடிப்படையில் டாஸ்மாக் பார் டெண்டர்கள், போக்குவரத்து ஒப்பந்தங்கள், மதுபான பாட்டிலிங் ஆலை விநியோக ஆணைகள் மற்றும் அதிகாரிகளின் இடமாற்றங்களில் பெருமளவிலான முறைகேடுகள் நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை ஜூலை 28-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் மேலாண்மை இயக்குநர் எஸ்.விசாகன் ஐஏஎஸ் உட்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் அதிரடித் திருப்பமாக, கரூரைச் சேர்ந்த செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளி ரமேஷ் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத் துறை போலிசார் நேற்றைய தினம் (ஜூலை 30) கைது செய்து, முதன்மைச் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 4-ல் உண்ணாவிரதம்... டாஸ்மாக் தனியார்மய முடிவுக்கு எதிராக ஊழியர்கள் போராட்டம்!
குறிப்பாக, கைதாகியுள்ள கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்களிடம் ரூ.35 கோடி வரை பேரம் பேசி ஆட்சியைச் சாய்க்க முயன்றதாகக் கூறப்படும் குதிரை பேர விவகாரத்தில் ஏற்கனவே திருவல்லிக்கேணி போலிசாரால் கைது செய்யப்பட்டு, சமீபத்தில் தான் ஜாமீனில் வெளிவந்திருந்தனர்.
ஜாமீனில் வெளிவந்த சில நாட்களிலேயே, தற்போது டாஸ்மாக் முறைகேடு ஊழல் வழக்கிலும் லஞ்ச ஒழிப்புத் துறையால் இருவரும் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும், முன்னாள் அமைச்சர் தரப்பிற்குப் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா? இல்ல புரளியா? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி!