ஆகஸ்ட் 4-ல் உண்ணாவிரதம்... டாஸ்மாக் தனியார்மய முடிவுக்கு எதிராக ஊழியர்கள் போராட்டம்!
டாஸ்மாக் நிறுவனத்தைத் தனியார்மயமாக்கினால் 23,000 குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் என எச்சரித்துள்ள விற்பனையாளர் நலச்சங்கம், ஆகஸ்ட் 4-இல் போராட்டத்தை அறிவித்துள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தைத் தனியார்மயமாக்கத் தமிழக அரசு முயற்சித்தால், கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் 23 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் எனத் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் நலச் சங்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் இன்று சேலம் சொர்ணபுரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலச் சிறப்புத் தலைவரும் சட்ட ஆலோசகருமான பாரதி தலைமையில் நடைபெற்ற இந்தச் செயற்குழுக் கூட்டத்தில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான டாஸ்மாக் விற்பனையாளர் நல சங்க நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், டாஸ்மாக் நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் அரசின் முடிவுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சங்கத்தின் மாநிலச் சிறப்புத் தலைவர் பாரதி கூறுகையில், டாஸ்மாக் கடைகளைத் தனியார்மயமாக்கத் துடிக்கும் தமிழக அரசின் முடிவை வன்மையாகக் கண்டிக்கிறோம். டாஸ்மாக் நிறுவனம் தொடங்கப்பட்ட போது 33 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றினர். தற்போது 23 ஆயிரம் பணியாளர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசுத் துறைகளில் மாற்றுப் பணி வழங்க வேண்டும் என இவர்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், தற்போது அரசோ தனியார்மயமாக்கும் முடிவை எடுத்துள்ளது. இதனைத் தொழிலாளர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா? இல்ல புரளியா? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி!
தொடர்ந்து பேசிய அவர், டாஸ்மாக் ஊழியர்களின் உழைப்பால் தான் அரசுக்கு ஆண்டுக்குச் சுமார் 48 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இந்த வருவாயைக் கொண்டுதான் மகளிர் இலவசப் பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை போன்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதனைத் தனியார் வசம் ஒப்படைத்தால் அரசுக்குக் கிடைக்கும் அத்தனை வருமானத்தையும் தனியார் முதலாளிகள் மட்டுமே அள்ளிச் செல்வார்கள். இதனால் 23 ஆயிரம் தொழிலாளர்களின் எதிர்காலமே நாசமாகும். எனவே அரசு இம்முடிவைக் கைவிட்டுப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும்.
அரசின் தனியார்மய முடிவைக் கண்டித்தும், மாற்றுப் பணி வழங்க வலியுறுத்தியும் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 5 முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகங்கள் முன்பாகப் பெருந்திரள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். அதன்பிறகும் அரசு மாற்றுப் பணி அறிவிப்பை வெளியிடாவிட்டால், 23 ஆயிரம் பணியாளர்களும் தங்களது குடும்பத்தினரோடு திரண்டு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி டாஸ்மாக்கில் புது வகை சரக்குகள் கிடைக்கும்!