தென்காசியில் பயங்கரம்! பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்து ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்த அரசு பேருந்து! 21 பேர் காயம்!
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை தென்காசி காவல் ஆய்வாளர் ராபர்ட் ஜெயின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தென்காசி: தென்காசியில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் வேட்டைக்காரன்குளம் அருகே அரசு பேருந்து ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்த நிலையில், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை சுமார் 7 மணியளவில் திருநெல்வேலி நோக்கி 1-டூ-1 அரசு பேருந்து புறப்பட்டது. பேருந்தை ஓட்டுநர் முத்துவேல் ஓட்டிச் சென்றார். நடத்துநராக இசக்கிமுத்து பணியில் இருந்தார்.
பேருந்து வேட்டைக்காரன்குளம் அருகே உள்ள அமுதகன்னி ஆற்று பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பேருந்தில் ஏதோ ஒன்று பலத்த சத்தத்துடன் உடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேகமாகச் சென்று கொண்டிருந்த பேருந்து நிலைதடுமாறி, பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியது.
இதையும் படிங்க: தென்காசியில் வீட்டுக்குள் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து வெடித்து விபத்து?! நொடியில் தரைமட்டமான வீடு! 2 குழந்தைகள் படுகாயம்!
மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் அலறினர். விபத்தைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக குற்றாலம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், பேருந்தில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட 21 பயணிகள் மற்றும் ஓட்டுநர், சிகிச்சைக்காக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை தென்காசி காவல் ஆய்வாளர் ராபர்ட் ஜெயின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், விபத்து தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டார்.
பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்த போதிலும் உயிரிழப்பு ஏற்படாதது சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், 21 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து காரணமாக அந்தச் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இந்த விபத்துக்கான காரணம் பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வண்டியை நிறுத்துங்க!! கோவையில் பேருந்து கதவில் சிக்கிய பெண்!! அலறிய பயணிகள்! ஓட்டுநர், நடத்துனருடன் வாக்குவாதம்!