ரோடு ஷோ தேவையே இல்ல... தடை பண்ணுங்க... திருமாவளவன் காட்டம்...!
ரோடு ஷோ தேவையில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ரோடு ஷோ நடத்த வழிகாட்டு நெறிமுறைகளுக்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ரோடு ஷோ அவசியமே இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது; காலம் காலமாக அரசியல் கட்சிகள் கடைப்பிடித்து வரும் ஆர்ப்பாட்டம், பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு போன்ற வடிவங்களே தொடர்ந்து பின்பற்றப்படவேண்டும். தற்போது நடைமுறையில் உள்ளதைப்போலவே அவற்றுக்கான அனுமதி பெறுவது உள்ளிட்ட வரைமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்றாலும் அவற்றை மேலும் எளிமைப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
உழைக்கும் மக்களை வெறுமென வாக்குப் பண்டங்களாகக் கருதி, கூலி கொடுத்து திரட்டி, மணிகணக்கில் தெருவோரங்களில் காத்துக்கிடக்கச் செய்யும் ரோடு ஷோ வடிவம் முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும். தேர்தல் பரப்புரையின் போதும் வாக்கு சேகரிக்கிறோம் என்கிற பெயரில் வீதிவீதியாக, ஒலிபெருக்கிகளின் பேரிரைச்சலுடன் பெரும்படையோடு செல்லும் போக்கையும் தடைசெய்ய வேண்டும். மாறாக, வாக்காளர்களிடம் தமது கருத்துகளை எடுத்துச் சொல்வதற்குப் பொதுக்கூட்டம் என்ற வடிவத்தைமட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.
சமூக ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் பெருகியுள்ள நிலையில் அவற்றின் மூலமாகவே தேர்தல் பரப்புரை நடைபெறுவதற்கு ஊக்குவிக்க வேண்டும்., வேட்பாளர்கள் வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களிடம் நேரடியாக வாக்குத்திரட்டும் நடவடிக்கைகளால், ஏராளமான பொருள் செலவுக்கும், முறைகேடுகளுக்கும் வழி வகுப்பது மட்டுமின்றி சாதி, மத அடிப்படையில் பிரிவினை உணர்வு தலை தூக்குவதற்கும் காரணமாகிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ. 20 லட்சம் வரை வைப்புத் தொகை... ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைக்கான பரிந்துரை வெளியீடு...!
எனவே, வேட்பாளர்கள் காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மூலமாகவே வாக்கு சேகரிப்பதை ஊக்குவிக்க வேண்டும். நேரடியாக வாக்காளர்களிடம் செல்வதைத் தடுக்க வேண்டும். சமூக ஊடகங்களின் பெருக்கம் வெறுப்புப் பரப்புரை பெருகுவதற்கு வழிவகுத்துள்ளது என்று கூறினார் . வெறுப்புப் பரப்புரையைத் தேர்தல் காலங்களில் மட்டுமின்றி அனைத்துக் காலங்களிலும் முற்றாகத் தடுப்பதற்கான வழிமுறைகள் வகுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: பத்து நாள் தான் டைம்... பக்காவா ரெடி ஆகணும்! ரோடு ஷோ விவகாரத்தில் ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!