ரஜினியை மிரட்ட யாராலும் முடியாது..!! ஆதவ் அர்ஜுனாவிற்கு திருமாவளவன் பதிலடி!
அரசியல் அதிகாரம் மற்றும் ஆட்சி போன்றவற்றுக்கு மயங்கக்கூடியவர் ரஜினி அல்ல என திருமாவளவன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் போனதற்குக் காரணம் திமுக-வின் மிரட்டல்தான் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்திற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் அதிகாரம் மற்றும் ஆட்சி போன்றவற்றுக்கு மயங்கக்கூடியவர் ரஜினி அல்ல என திருமாவளவன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, ரஜினிகாந்த் சிஸ்டத்தை மாற்ற நினைத்தபோது திமுக குடும்பம் அவருக்குப் பல மிரட்டல்களைக் கொடுத்து அரசியலுக்கு வரவிடாமல் தடுத்தது எனப் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், அந்த மனவலிமை தற்போது விஜய்யிடம் மட்டுமே இருப்பதாகவும் அவர் ஒப்பிட்டுப் பேசினார்.
இந்தக் கருத்தை முற்றிலுமாக மறுத்துள்ள திருமாவளவன், ரஜினிகாந்த் ஒரு மாபெரும் ஆளுமை. அவர் அரசியலுக்கு வராதது அவரது தனிப்பட்ட முடிவு மற்றும் உடல்நிலை சார்ந்தது. அதனை விடுத்து, திமுக மிரட்டியது என்று கூறுவது வெறும் கற்பனையே எனச் சாடினார்.
இதையும் படிங்க: "சாதி பெயரால் பிளவுபடுத்தும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை தேவை" - திருமாவளவன் கோரிக்கை!
ரஜினி போன்ற ஒரு மூத்த கலைஞரை அரசியல் லாபத்திற்காக இழிவாகப் பேசுவதோ அல்லது அவரது ஆளுமையைக் கொச்சைப்படுத்துவதோ ஏற்கத்தக்கதல்ல எனத் திருமாவளவன் அறிவுறுத்தினார்.
இச்சம்பவம் குறித்துச் செய்தியாளர்கள் கேட்டபோது, "திமுக - விசிக கூட்டணியில் எந்தச் சலசலப்பும் இல்லை. சிலர் கிளப்பும் இத்தகைய வதந்திகள் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தாது" என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
ஆதவ் அர்ஜுனா ஏற்கனவே திருமாவளவன் மற்றும் விசிக குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வந்த நிலையில், தற்போது ரஜினிகாந்த் விவகாரத்திலும் அவர் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: சினிமா மயக்கம் எடுபடாது! தவெக விஜய் குறித்து திருமாவளவன் அதிரடி!