#TNElectionResults2026: வாக்கு எண்ணிக்கையில் தவெக அமோக முன்னிலை..!! மு.க.ஸ்டாலின் உள்பட 31 அமைச்சர்கள் பின்னடைவு..!!
வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.
தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக கணக்கிடப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி, தமிழக வெற்றி கழகம் (தவெக) பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. தவெக 103 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அ.தி.மு.க. 78 இடங்களிலும், தி.மு.க. 50 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. நாம் தமிழர் கட்சி (நா.த.க.) எந்தத் தொகுதியிலும் முன்னிலை இல்லை. குறிப்பாக, சென்னை மாநகரத்தின் 16 தொகுதிகளிலும் தவெகவே முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த முன்னிலை நிலவரம் தொடர்ந்தால், தமிழக அரசியல் களத்தில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதுவரை பெறப்பட்ட தகவல்களின்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட அவரது அமைச்சரவையைச் சேர்ந்த 31 அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். இந்த அதிர்ச்சி முடிவுகள் தி.மு.க. தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், வாக்கு எண்ணிக்கை முழுமையடைய இன்னும் சில மணி நேரங்கள் ஆகலாம் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழக சட்டமன்றத் தேர்தல் விறுவிறு..!! காலை 11 மணி நிலவரம்.. 37.56% வாக்குப்பதிவு..!!
ஆனால் தற்போதைய போக்கு தவெகவுக்கு சாதகமாக இருப்பதால், அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகத்துடன் களத்தில் இறங்கியுள்ளனர். இந்தத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தன. தவெக தலைவர் விஜய் தலைமையில் இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
மறுபுறம், தி.மு.க. தனது ஆட்சியின் சாதனைகளை முன்னிறுத்தியும், அ.தி.மு.க. தனது அனுபவத்தை வலியுறுத்தியும் பிரச்சாரம் செய்தன. வாக்கு எண்ணிக்கை முடிவில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது விரைவில் தெரியவரும். தமிழக மக்களின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை நோக்கி அரசியல் கட்சிகள் உன்னிப்புடன் காத்திருக்கின்றன.
இதையும் படிங்க: விதியை மாற்ற ஒரு வாய்ப்பு.. உங்கள் வாக்கை மதிப்புமிக்கதாக்குங்கள்..!! பியூஸ் கோயல் வலியுறுத்தல்..!!