×
 

கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

தமிழகத்தில் முதன்முறையாகக் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளுடன் இணைந்து முதலமைச்சர் விஜய்  'கூட்டணி ஆட்சி' அமைக்கிறார். நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் 21 புதிய அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்.

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தமாக, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை (மே 21) காலை 10 மணிக்குத் தமிழ்நாட்டின் புதிய அமைச்சரவை விரிவாக்கப் பதவியேற்பு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. தேர்தல் பிரசாரக் களங்களில் தாம் முழங்கியபடியே, தமிழ்நாட்டில் 'கூட்டணி ஆட்சி' என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய அரசியல் இலக்கணத்தை முதலமைச்சர் விஜய் முறைப்படி கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு கடந்த மே 10-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட போது, முதலமைச்சருடன் சேர்த்து மொத்தம் 10 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றிருந்தனர். உயர் கல்வி, போக்குவரத்து, வீட்டுவசதி மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட முக்கியத் துறைகள் யாருக்கும் ஒதுக்கப்படாமல் இருந்த நிலையில், நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் மாபெரும் அமைச்சரவை விரிவாக்க விழா நடைபெறுகிறது. தமிழக ஆளுநரின் கூடுதல் பொறுப்பை வகிக்கும் மாண்புமிகு ஆர்.வி. அர்லேகர் அவர்கள், புதிய அமைச்சர்களுக்குப் பதவியேற்புப் பிரமாணமும், ரகசியக்காப்புப் பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார். இந்த விழாவில் தவெக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 21 புதிய முகங்கள் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய அமைச்சரவையில் மிக முக்கியத் திருப்பமாக, கடந்த 59 ஆண்டுகாலத் தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாகக் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகள் முறைப்படி வழங்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் சார்பில் கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் ஆகிய இருவரும் நாளை அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்.

இதையும் படிங்க: அமைச்சரவை விரிவாக்க விழா: சிபிஐ கட்சிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்!

இதனைத் தொடர்ந்து, தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளித்து வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் அமைச்சரவையில் நேரடியாகப் பங்கேற்று மக்கள் பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் அதிகாரப்பூர்வமாக நேரடி அழைப்பு விடுத்துள்ளனர். அதன்படி, இரு கட்சிகளின் சார்பிலும் தலா ஒருவர் வீதம் 2 தலைவர்கள் அமைச்சரவையில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆளும் தவெக கட்சியின் சார்பில் 15-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவுள்ளனர்.

ஏற்கனவே கோட்டையில் 9 அமைச்சர்கள் மட்டுமே முழுநேரப் பணிகளைக் கவனித்து வரும் சூழலில், நாளை 21 புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்பதன் மூலம் தமிழக அமைச்சரவையின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 30 ஆக உயரவுள்ளது. புதிய அமைச்சர்கள் அனைவரும் ஆளுநர் மாளிகையில் முறைப்படி பதவியேற்றுக் கொண்ட பிறகு, நாளை மதியம் முதலமைச்சர் விஜய் அவர்களின் பரிந்துரையின் பேரில், புதிய அமைச்சர்களுக்கான முக்கியத் துறைகள் (Portfolios) முறைப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்படவுள்ளது.

திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற கட்சிகளைத் தங்களது அசுர அரசியல் வியூகத்தால் வளைத்துப் போட்டு, தமிழகத்தில் முதன்முறையாகப் பன்முகத்தன்மை கொண்ட ஒரு கூட்டாட்சி முறையிலான கூட்டணி அமைச்சரவையை முதலமைச்சர் விஜய் அமைத்திருப்பது, கோட்டை வட்டாரத்திலும் தேசிய அரசியல் அரங்கிலும் மிகப்பெரிய விவாதத்தையும் அசுரப் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: 59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. ராஜேஷ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share