அரிசி விலை உயர்வை ஒப்புக்கொண்ட அமைச்சர்! விலை ஏற்றத்திற்குப் பின்னால் என்ன காரணம்? வெளியான விளக்கம்!
சந்தை நிலைமைகளை கண்காணித்து, தேவையான விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் மாதத்திலிருந்து நான்கு மாதங்களில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், பூண்டு மற்றும் காய்கறிகளின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளதால், குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் அன்றாட வாழ்வில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் இதே நிலை நீடிப்பதால், பொதுமக்கள் இதை தீவிரமாக எடுத்துரைத்து வருகின்றனர்.
குறிப்பாக, ஜூன் மாதத்தில் ஒரு மூட்டை அரிசி ரூ.1,100-க்கு விற்பனையானது, தற்போது ரூ.700 உயர்ந்து ரூ.1,800 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிலோ பொன்னி அரிசி ரூ.60-லிருந்து ரூ.80 ஆக உயர்ந்துள்ளது. இட்லி அரிசியும் ஒரு மூட்டை ரூ.900-லிருந்து ரூ.1,200 ஆகவும், ஒரு கிலோ ரூ.35-லிருந்து ரூ.50 ஆகவும் உயர்ந்துள்ளது. துவரம்பருப்பு ஒரு கிலோ ரூ.120-லிருந்து ரூ.160 ஆகவும், உளுத்தம்பருப்பு ரூ.120-லிருந்து ரூ.150 ஆகவும், சமையல் எண்ணெய் ஒரு லிட்டர் ரூ.130-லிருந்து ரூ.180 ஆகவும் உயர்ந்துள்ளது.
பூண்டின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, இஞ்சி, எலுமிச்சை போன்ற காய்கறிகளின் விலையும் 30 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் குடும்பங்களின் மாதாந்திர செலவு பெருமளவு அதிகரித்து, அன்றாட உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தீபாவளி செலவுக்கு நடுவே அதிர்ச்சி.. அரிசி விலை கிலோ ரூ.100-ஐ தாண்ட வாய்ப்பா..?? திணறும் குடும்ப பட்ஜெட்..!!
இந்த விலை உயர்வை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. அரசு உடனடியாக தலையிட்டு விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், மக்களின் சுமைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவை வலியுறுத்தி வருகின்றன. சந்தை நிலைமைகளை கண்காணித்து, தேவையான விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இதற்கிடையே உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து அரிசி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். முன்னதாக விலை உயர்வு இல்லை என்று கூறியிருந்த அவர், தற்போது சர்க்கரை மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயர்ந்திருப்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
“ஒரிரு நாட்களில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். விலை கண்காணிப்பு குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அனைத்து தரப்பு கருத்துக்களையும் உள்வாங்கி, அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருள்களுக்கும் தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சில நாட்களில் அறிவிப்புகள் வெளியாகும்” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அரசு விரைவில் விலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், விநியோகத்தை அதிகரிப்பது மற்றும் சந்தை தலையீடு போன்ற நடவடிக்கைகள் தேவை என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. விலைவாசி உயர்வு தொடர்ந்தால், அது சமூக மற்றும் பொருளாதார பாதிப்புகளை மேலும் தீவிரப்படுத்தும் என்பதால், உடனடி தீர்வு எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: லெட்டர் பேட் கட்சியா அதிமுக..? EPS குறித்து அவதூறு..! அமைச்சர் நிர்மல் குமாருக்கு நோட்டீஸ்..!!