தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 2 ஆண்டுகள் தாமதம்! ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு அபராதம்!
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க இரண்டு ஆண்டுகள் காலதாமதம் செய்த தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க இரண்டு ஆண்டுகள் காலதாமதம் செய்த தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்குத் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி மாணவர் பரத்ராஜ், கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வில் பங்கேற்றார். ஆனால், தேர்வு முடிவுகள் வெளியானபோது, அவர் அந்தத் தேர்வில் கலந்துகொள்ளவில்லை (Absent) எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து விளக்கம் கேட்டு, 2022-ஆம் ஆண்டிலேயே பரத்ராஜ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்திருந்தார்.
சட்டப்படி 30 நாட்களுக்குள் தகவல் வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறை இருந்தும், பல்கலைக்கழகம் இரண்டு ஆண்டுகளாக எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர், மாநில தகவல் ஆணையத்தில் புகார் மனுத் தாக்கல் செய்தார். தனது சான்றிதழ்களை வழங்கவும் அவர் அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையும் படிங்க: சிறப்பு பேருந்தா..? எங்கய்யா இருக்கு..? தி.மலையில் கொந்தளித்த பக்தர்கள்..!!
இந்த வழக்கு மாநில தகவல் ஆணையர் பிரியாகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலைக்கழக அதிகாரி ஆஜராகி, "விண்ணப்பம் தங்களுக்குக் கிடைக்கவில்லை; இருப்பினும் தற்போது தகவல் வழங்கப்பட்டுவிட்டது" என விளக்கம் அளித்தார். ஆனால், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த ஆணையம் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்தது:
பாதிக்கப்பட்ட மாணவருக்கு 10 ஆயிரம் ரூபாயை 20 நாட்களுக்குள் இழப்பீடாக வழங்க வேண்டும். மாணவரின் சான்றிதழ்களை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும். இழப்பீடு மற்றும் சான்றிதழ் வழங்கியது குறித்து வரும் மே 22-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்தத் தீர்ப்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைச் சரியாகச் செயல்படுத்தாத அரசு நிறுவனங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: ரெண்டு நாளைக்கு ஜாலிதான்..! கொடைக்கானலில் சுற்றுலா தலங்களைக் கட்டணமின்றி பார்வையிட அனுமதி..!!