திருச்சியில் விஜய்! நாளை எம்.ஜி.ஆர் சிலை அருகே பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரம்!
பின்தொடர வேண்டாம்; நேரலையில் காணுங்கள் என தொண்டர்களுக்குத் தமிழக வெற்றிக் கழகம் முக்கிய வேண்டுகோள்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளருமான விஜய் அவர்கள், நாளை (02.04.2026, வியாழக்கிழமை) திருச்சி கிழக்குத் தொகுதியில் தனது அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.
இந்தத் தேர்தல் பயணத்தின் முக்கிய விவரங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் இதோ:
பிரச்சார நேரம் மற்றும் இடம்:
இடம்: திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி, மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகாமை.
நேரம்: நாளை மதியம் 12.30 மணி முதல் மாலை 4 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்திடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அயனாவரம் தவெக கூட்டத்தில் மது பாட்டில் வீச்சு! மேடையிலேயே அமர்ந்து ஆதவ் அர்ஜுனா போராட்டம்!
கழகத் தலைவர் அவர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கினைக் கருத்தில் கொண்டு, தவெக தலைமை ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது: தலைவர் அவர்களின் பிரச்சார வாகனத்தை, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் தொண்டர்கள் அறவே பின்தொடரக் கூடாது எனத் திட்டவட்டமாகக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வெப்பம் மற்றும் மக்கள் நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்-சிறுமியர், பள்ளி மாணவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலம் குன்றியவர்கள் நேரில் வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேரில் வர இயலாதவர்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சி நேரலைகள் (Live Telecast) வாயிலாகப் பிரச்சாரத்தைக் கண்டு ஒத்துழைப்பு தருமாறு கோரப்பட்டுள்ளது. பிரச்சார நிகழ்வு நடைபெறும் இடத்தில் குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கழகத்தின் சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் விஜய் போட்டியிடுவதால், திருச்சி கிழக்குத் தொகுதியில் நாளை நடைபெறும் இந்தப் பிரச்சாரம் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பிற தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி பெறும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: சினிமா வேற.. நிஜம் வேற..! விஜய்யை வெளுத்து வாங்கிய எஸ்.பி. வேலுமணி!