வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி: ஏப்ரல் 16 முதல் தொடக்கம் என அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!
வேட்பாளர்கள் முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன் பணிகள் நடைபெறும் என தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-க்கான ஆயத்தப் பணிகள் குறித்துத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று முக்கியச் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் விபரங்களைப் பதிவேற்றம் செய்யும் பணிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்த விரிவான விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவேற்றம் செய்யும் பணி வரும் 16.04.2026 முதல் மேற்கொள்ளப்பட உள்ளது.
வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகளை (VVPAT) ஒதுக்கீடு செய்வதற்கான 'இரண்டாம் நிலை சமவாய்ப்பு' நடைமுறை தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் கடந்த 11.04.2026 அன்று தொடங்கி வரும் 16.04.2026 வரை நடைபெற உள்ளன. இந்தியத் தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண்மை ஏற்பாட்டு முறை (EMS) வாயிலாக இந்த ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழக தேர்தல் 2026: வேட்புமனு வாபஸ் முடிந்தது! இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
தேர்தல் நடைமுறையின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில் சமவாய்ப்பு ஒதுக்கீடு மற்றும் சின்னம் பதிவேற்றம் ஆகிய அனைத்துச் செயல்பாடுகளும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெறும். வாக்குச்சாவடி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இயந்திரங்கள் மற்றும் இருப்புக்காப்பில் உள்ள இயந்திரங்களின் பட்டியல்கள் அனைத்து வேட்பாளர்களுக்கும் பகிரப்படும். இந்தப் பட்டியலில் உள்ள இயந்திரங்கள் மட்டுமே வாக்குப்பதிவு நாளன்று அந்தந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான விரிவான அறிவுறுத்தல்கள் மற்றும் கையேடுகளைப் பொதுமக்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.eci.gov.in/evm-vvpat என்பதில் தெரிந்துகொள்ளலாம்.
தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டின் பெருவிழா என்ற முழக்கத்துடன் தேர்தல் ஆணையம் இந்தப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேர்தலுக்கு பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக செல்வப்பெருந்தகை அறிவிப்பு!