×
 

டிஎன்பிஎஸ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வு! சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு தேதி வெளியீடு!

மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு செப்டம்பர் 1 முதல் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்து சார்நிலைப் பணியில் அடங்கியுள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-2 (Motor Vehicle Inspector, Grade-II) பணிக்கான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட (அறிவிக்கை எண்: 03/2018) மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-2 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தகுதிபெற்ற தேர்வர்களுக்கான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வானது வரும் 01.09.2026 பிற்பகல் முதல் 03.09.2026 முற்பகல் வரை சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்விற்குத் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தேர்வர்களின் பட்டியல் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு நாள், நேரம் மற்றும் வழிகாட்டுதல்கள் அடங்கிய நுழைவுச்சீட்டு/அழைப்பாணையினை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கான தகவல்கள் தேர்வர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்பப்படும் என்றும், தபால் மூலம் தனிப்பட்ட முறையில் அழைப்பாணை எதுவும் அனுப்பப்படமாட்டாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குரூப் 2, 2ஏ தேர்வுகள் நவம்பர் 1-ல் நடைபெறும்! TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

மேலும், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற வழிகாட்டுதல் உத்தரவுகளின்படி, தேர்வர்கள், மனுதாரர்கள் மற்றும் மேல்முறையீட்டாளர்கள் தங்களது நியாயமான புகார்கள் மற்றும் குறைகளை உரிய ஆவண ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க ஏதுவாகத் தேர்வாணையத்தின் இணைச் செயலாளர் திருமதி. ந. வரலட்சுமி ஒருங்கிணைப்பு அலுவலராக (Nodal Officer) நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், அலுவலக வேலை நாட்களில் காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை அவரை 044-25300468 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை எழும்பூர் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share